நில அபகரிப்பா? - OS மணியன் விளக்கம்
முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன் தங்களது நிலத்தை, அபகரித்துக் கொண்டதாகவும், அதை மீட்டுத்தர கோரியும் 93 வயதான ஒரு முதியவர் நாகை மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த கத்தரிப்புலம் கிராமத்தில் 93 வயதான சிவபாலன் என்பவருக்கு, தலைஞாயிறு பகுதியில் உள்ள 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான 73 ஏர்ஸ் நிலம் உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 2020 ஆம் ஆண்டு முதல், இந்நிலத்தை முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் அபகரித்து, அதில் இறால் பண்ணை அமைத்து உள்ளதாகவும், அதனை மீட்டு தரக் கோரியும், சிவபாலன் உரிய ஆவணங்களுடன், நாகை மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்தார்.
இது தொடர்பாக பேசிய முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியனிடம் கூறும்போது, 1997-98 காலகட்டத்தில் இருந்து, தான் உள்பட 50 பேர் அப்பகுதியில், இறால் பண்ணை மற்றும் விவசாயம் செய்து வருவதாகவும், இதற்கான ஆவணங்கள் தங்களிடம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அதேபோல, சம்பந்தப்பட்ட நிலம் தொடர்பாக யாரும் தன்னிடம் வந்து பேசவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
