நேற்று ரயில் விபத்து நடந்த அதே ரூட்டில்.. நூலிழையில் தப்பிய பயணிகள் ரயில்
திருவள்ளூரில் டீசல் டேங்கர் ரயிலில் தீ - நடந்தது என்ன?
டீசல் டேங்கர் ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தால், சுமார் 900 டன் கச்சா எண்ணெய் வீணான நிலையில், ரயில் சேவை ரத்தானதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
மணலியில் உள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்தில் இருந்து 52 பெட்டிகளுடன் ஜோலார்பேட்டை நோக்கி சரக்கு ரயில் சென்று கொண்டிருந்தது.
காலை 5.30 மணியளவில் திருவள்ளூர் ரயில் நிலையத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் சென்ற போது, பெட்டிகள் தடம் புரண்டு, 3வது ரயில் பெட்டியில் தீப்பற்றியதாக தகவல் வெளியானது.
உடனடியாக லோகோ பைலட் அவசர கால பிரேக்கை அழுத்தி டிரெய்னை நிறுத்த, கச்சா எண்ணெய் என்பதால், தீ மளமளவென பரவி காட்டுத்தீ போன்று கொளுந்துவிட்டு எரிந்தது.
மொத்தம் 18 பெட்டிகள் தீப்பற்றி எரிந்த நிலையில், ரயிலின் லோகோ பைலட் திருவள்ளூர் ஸ்டேஷன் மாஸ்டர் இடம் தெரிவிக்க, தீயணைப்புத்துறையினருடன், பல்வேறு துறையினரும், பொதுமக்களும் மீட்பு பணிகளில் இறங்கினர்.
விபத்து ஏற்பட்டு ஒரு மணி நேரத்திற்குள் ரயில்வே பாதுகாப்புத்துறை அதிகாரிகள் களத்திற்கு வந்து மீதம் தீப்பற்றாமல் இருந்த 34 பெட்டிகளை தனியாக பிரித்து தனி எஞ்சின் மூலம் அரை கிலோமீட்டர் தூரத்திற்கு நகர்த்திச் சென்றனர்.
ஒரு பெட்டியில் சுமார் 54 டன் கச்சா எண்ணெய் வீதம், ஒட்டுமொத்தமாக 18 பெட்டியில் சுமார் 900 டன் அளவிற்கு கச்சா எண்ணெய் பற்றி எரிய, திருவள்ளூரே, கரும்புகையால் திணறியது.
கச்சா எண்ணெய் என்பதால், தீயை கட்டுப்படுத்த, வேதியியல் திரவத்தை தண்ணீரோடு 4க்கு 1 என்கிற விகிதத்தில் கலந்து பீய்ச்சு அடித்து,
8 மணி நேர முயற்சிக்குப் பிறகு 100க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த விபத்தால், மொத்தம் 3 தண்டவாளங்கள் முழுமையாக 200 மீட்டர் அளவிற்கு சேதமடைந்ததால், அரக்கோணம் வழித்தடத்தில் செல்லும் வந்தே பாரத் சதாப்தி உட்பட 8 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.
இதனையடுத்து மீட்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்ற நிலையில், விபத்திற்கான காரணம் குறித்து விசாரிக்க கமிட்டி அமைக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே மேலாளர் ஆர்.என் சிங் தெரிவித்துள்ளார்.
விபத்து ஏற்பட்ட சில நிமிடங்களில் அந்த வழியே மங்களூரு எக்ஸ்பிரஸ் ரயில் செல்ல இருந்த நிலையில், அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு ரயிலை நிறுத்த கூறியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
மேலும், ரயில்கள் ரத்தால் பாதியில் தவித்த பயணிகளுக்காக காட்பாடி, குடியாத்தம், அரக்கோணம், திருவள்ளூர் மற்றும் திருத்தணியில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.
சென்னையில் இருந்து செல்லும் ரயில்கள் தடையின்றி இயக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், சீரமைப்பு பணிகள் முடிவடைந்த பிறகு சென்னைக்கு வரும் ரயில் சேவைகள் படிப்படியாக இயக்கப்படும் எனவும் ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
