

வாகனங்கள், வீடு, நிலம் உள்ளிட்டவற்றை வாங்க, விற்க ஓஎல்எக்ஸ் இணையதளத்தை பயன்படுத்துவோர் அதிகம். அலைந்து திரிய வேண்டியதன் அவசியத்தை அறவே ஒழித்ததால் இதனை பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இந்த இணையதளத்தை குறிவைத்து சுற்றும் மோசடி கும்பலின் எண்ணிக்கையும் ஒரு பக்கம் உயர்ந்து வருகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்பாக ராணுவ அதிகாரிகள் என தங்களை கூறிக் கொண்ட ஒரு கும்பல் 100 கோடி ரூபாய் வரை கொள்ளையடித்தது. ராஜஸ்தானில் இருந்து இவர்களை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்களும் வெளியானது. இவர்கள் கைவரிசை காட்டியதும் ஓஎல்எக்ஸ் இணையதளம் தான்.
இதேபோல் கடந்த சில வாரங்களுக்கு முன் தன்னிடம் இருந்த விலை உயர்ந்த டூவீலரை விற்பனை செய்ய ஓஎல்எக்ஸ் இணையதளத்தில் பதிவிட்டுள்ளார் சென்னையை சேர்ந்த பிரதீப்குமார் என்ற இளைஞர். அவரை தொடர்பு கொண்ட 2 பேர், வாகனத்துடன் ஓஎம்ஆர் சாலைக்கு வருமாறு கூறியுள்ளனர். அங்கு வந்த 2 பேரும் வாகனத்தை ஓட்டி பார்ப்பதாக கூறி அதனை திருடிச் சென்றுள்ளனர். வடிவேலு பட காட்சியை நினைவுபடுத்தும் வகையில் இந்த சம்பவம் நிஜத்தில் நடந்தேறியது.
தற்போது மீண்டும் ஒரு சம்பவம் சென்னையில் அரங்கேறியிருக்கிறது. திருவல்லிக்கேணியில் தீர்த்தபாலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் முகமது காசிம் என்பவர் வசித்து வந்தார். அவரது மறைவிற்கு பிறகு அவரது மகன்கள் அந்த வீட்டில் வசித்து வந்தனர்.
இரண்டு மகன்களும் வீட்டை காலி செய்து விட்டு வேறு பகுதிக்கு சென்ற நிலையில் காலியாக இருந்த அந்த வீட்டை 30 லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்ய உள்ளதாக ஓஎல்எக்ஸ் இணையதளத்தில் விளம்பரம் வெளியானது. இதுகுறித்து இந்து அறநிலையத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதால்
போலீசார் விசாரணையில் களமிறங்கினர்.
அப்போது சாதிக் பாட்சா என்பவர் ஓஎல்எக்ஸ் இணையதளத்தில் இந்த வீட்டை 30 லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்ய விளம்பரம் செய்திருப்பது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், சாதிக் பாட்சாவை தேடி வருகின்றனர். ஓஎல்எக்ஸ் உள்ளிட்ட இணையதளங்களை குறிவைத்து மோசடிகள் அதிகம் நடக்கும் நிலையில் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்ற கருத்தும் இங்கே முன்வைக்கப்படுகிறது...