

நித்தியானந்தாவிற்கும் சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லை என்று சொல்லுமளவிற்கு, நாளுக்கு நாள், அவரை பற்றிய பல்வேறு புகார்கள் எழுந்த வண்ணம் இருக்கிறது.
கடந்த 2018-ம் ஆண்டு, பாலியல் வழக்கில், நித்யானந்தாவிற்கு எதிராக கர்நாடக சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில், தற்போது, குஜராத்தில் இரண்டு இளம் பெண்களை அவர் கடத்தி வைத்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. உண்மையில், நித்தியானந்தாவை சுற்றியும், அவர் ஆசிரமத்திலும் என்ன நடக்கிறது....?
குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில், இரண்டு இளம் பெண்கள், கடத்தப்பட்டு சித்ரவதை செய்யப்படுவதாக, அவர்களது தந்தை, ஜனார்தன் ஷர்மா என்பவர் அகமதாபாத் போலீசாரிடம் புகார் அளித்தார். இதில், தனது மகள்களை, நித்யானந்தா, சட்ட விரோதமாக அடைத்து வைத்திருப்பதாக குற்றம் சாட்டியிருந்தார். புகாரின் அடிப்படையில், ஆசிரம நிர்வாகிகள் இருவரை போலீசார் கைது செய்தனர்.
இதை தொடர்ந்து, நித்தியானந்தா எங்கே என்று விசாரித்தபோது, அவர் வெளிநாடு தப்பிச்சென்றுவிட்டதாக தகவல் வெளியானது. பின்னர், நித்யானந்தாவின் பாஸ்போர்டை போலீசார் சோதித்தபோது, அது கடந்த 14 மாதங்களுக்கு முன்பே காலாவதியானது தெரியவந்தது. அவரது பாஸ்போர்ட் தேதி முடிவடைந்த நிலையில், தற்போது வரை, புதுப்பிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. ஈகுவடார் நாட்டில் உள்ள தனித்தீவில் நித்தியானந்தா, தங்கியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பாஸ்போர்ட் காலாவதியான நிலையில் நித்தியானந்தா, ஈக்வோடார் நாட்டிற்கு தப்பிச்சென்றது எப்படி..? அதற்கு உதவியது யார்..? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த நிலையில், ஆசிரமத்தில் இருந்து கடத்தப்பட்ட இளம் பெண்கள் இருவரை மீட்டுள்ளதாக அகமதாபாத் போலீசார் தெரிவித்துள்ளனர். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அந்த இளம் பெண்கள், சட்டவிரோதமாக நிலம் மற்றும் பணம் வசூல் செய்வதற்காக, நித்தியானந்தா தங்களை பயன்படுத்தியதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.
2017-ல் இருந்து ஆசிரமத்தில் ஊழல் அதிகமாகி விட்டது. கல்வி மட்டுமல்ல அனைத்திலும் ஊழல் அதிகரித்து விட்டது. சுவாமிஜியை விளம்பர செய்யும் பணியில் ஈடுபடுத்தப்பட்டோம். நிதிவசூலில் ஈடுபடுத்தப்பட்டோம், ரூ.1000 முதல் லட்சக்கணக்கில் நிதி வசூல் செய்தோம். யாரை பார்த்தாலும் 3-வது கண்ணாக பார்க்கவேண்டும் என்பது சுவாமிஜியின் கொள்கை பக்தர்களிடம் சுமார் ரூ.3 லட்சம் மூலம் 8 கோடி வரை வசூல் செய்துள்ளோம் நிதி இல்லை என்றால் நிலமாகவும் வாங்கி இருக்கிறோம். சுமார் 100 ஏக்கர் முதல் 700 ஏக்கர்வரை நிலங்களை எழுதி வாங்கியுள்ளோம்
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் பாலியல் தொடர்பான சர்ச்சைகள் எழுந்து அடங்கிய நிலையில், தற்போது மீண்டும் எழுந்துள்ள புதிய சர்ச்சைகளால், நித்தியானந்தா விவாதப்பொருளாக மாறி இருக்கிறார்.