Nilgiris | Ooty | நீலகிரி, ஊட்டி செல்வோர் கவனத்திற்கு..! "மாற்றம்.." காவல்துறை முக்கிய அறிவிப்பு
கோடை சீசன் தொடங்கியுள்ள நிலையில், நீலகிரி மாவட்டம் உதகைக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளாதால், வருகிற மே 1-ஆம் தேதி முதல் நீலகிரியில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. மேட்டுப்பாளையத்திலிருந்து உதகைக்கு வரும் வாகனங்கள், காட்டேரி சந்திப்பிலிருந்து சேலாஸ் மற்றும் லவ்டேல் வழியாக நகருக்குள் வர வேண்டும். அதேபோல், மேட்டுப்பாளையத்திலிருந்து கூடலூர் மற்றும் தொப்பக்காடு செல்லும் வாகனங்கள் லவ்டேல் சந்திப்பு மற்றும் காந்தள் முக்கோணம் வழியாகத் திருப்பி விடப்படும். சுற்றுலா பேருந்துகள் மற்றும் வேன்கள் ஆவின் வாகன நிறுத்துமிடம் மற்றும் அரசு கலைக்கல்லூரி மைதானங்களில் நிறுத்தப்பட வேண்டும். அங்கிருந்து சுற்றுலாத் தலங்களுக்குச் செல்ல அரசு சுற்றுலாப் பேருந்துகளைப் பயணிகள் பயன்படுத்திக் கொள்ளலாம். குறிப்பாக, உதகையிலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் அனைத்து சுற்றுலா வாகனங்களும் கோத்தகிரி வழியாக மட்டுமே செல்ல அனுமதிக்கப்படும். குன்னூர் பர்லியார் வழியாகச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், பால் மற்றும் எரிவாயு போன்ற அத்தியாவசியப் பொருட்கள் ஏற்றி வரும் வாகனங்களைத் தவிர, மற்ற கனரக வாகனங்கள் காலை 8 மணி முதல் இரவு 9 மணி வரை உதகை நகருக்குள் நுழைய அனுமதியில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
