Nellai | Car Fire | TN Police | சொத்து தகராறு - தம்பியின் காருக்கு தீ வைத்த அண்ணன்

சொத்து தகராறு - தம்பியின் காருக்கு தீ வைத்த அண்ணன்
Summary

நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அருகே, சொத்து தகராறு காரணமாக தம்பியின் காருக்கு, அண்ணனே தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிசிடிவியில் பதிவான அந்த காட்சிகளை முதலில் பார்க்கலாம்... சேரன்மகாதேவி அடுத்த கங்கனான்குளத்தைச் சேர்ந்த முத்து என்பவர் வாடகை கார் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். அவர் தனது சொந்த காரை நேற்று இரவு வீட்டின் முன்பு நிறுத்திவிட்டு உறங்கச் சென்றுள்ளார். நள்ளிரவில் கார் தீப்பற்றி எரிவதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், உடனடியாக சேரன்மாதேவி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளித்தார். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இருப்பினும், கார் பெருமளவில் சேதமடைந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில், முத்துவின் உடன்பிறந்த சகோதரர் பாபநாசம், காருக்கு தீ வைத்தது தெரியவந்துள்ளது. இருவருக்கும் இடையே நீண்ட நாட்களாக சொத்து பிரச்சினை இருந்து வந்துள்ளது. முத்துவுக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் நிலத்தில் பாபநாசம் செங்கல் சூளை நடத்தி வந்ததாகவும், சொத்தைப் பிரித்து தருமாறு முத்து பலமுறை கோரியிருந்தும் அதற்கு உடன்பாடு ஏற்படாததால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விவகாரம் குறித்து உறவினர்கள் தலையிட்டு சமரச பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், ஆத்திரமடைந்த பாபநாசம் பெட்ரோல் ஊற்றி காருக்கு தீ வைத்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, காருக்கு தீ வைத்ததாக குற்றம்சாட்டப்பட்ட பாபநாசத்தை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

#CarFire #Nellai #TNPolice #CCTV

X

Thanthi TV
www.thanthitv.com