நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் வாழ்மங்கலம் கிராமத்தை சேர்ந்த கண்ணன், உமா மகேஸ்வரி தம்பதியின் 17 வயது மகள் ஜனனி. பதினொன்றாம் வகுப்பு பாதியிலேயே முடித்துவிட்டு வீட்டில் இருந்த ஜனனி, அதே பகுதியை சேர்ந்த ராஜ் குமார் என்ற இளைஞரை காதலித்து வந்துள்ளார். ராஜ் குமார் பட்டியலினத்தை சேர்ந்தவர் என்பதால், இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் 2 முறை வீட்டை விட்டு வெளியேறிய ஜனனி,18 வயது பூர்த்தி ஆகாததால், திருமணம் செய்து கொள்ள முடியாததால், பெற்றோரால் வலுக்கட்டாயமாக வீட்டிற்கு அழைத்து செல்லப்பட்டார். ஜனனிக்கு 18 வயது பூர்த்தியாக இன்னும் 4 நாட்களே மீதமிருக்கும் நிலையில், அதன்பின் காதலன் ராஜ்குமாருடன் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டிருந்தது தெரிய வந்ததால், ஆத்திரத்தின் உச்சத்திற்கு சென்ற தாய் உமா மகேஷ்வரி பெற்ற மகள் என்றும் பாராமல், மண்ணெண்ணெயை ஊற்றி ஜனனியை கொளுத்தியுள்ளார். பின்னர் அவரும் தனக்கு தானே தீ வைத்து கொண்டதாக தெரிகிறது. இந்த ஆணவ வெறியாட்டத்தில் ஜனனியின் உயிர் பிரிந்தது. தாய் உமா மகேஷ்வரிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.