பணப்பிரச்சினை - செல்போன் டவரில் ஏறிய இளம்பெண்
பணப்பிரச்சினை - செல்போன் டவரில் ஏறிய இளம்பெண்
நெல்லை மாவட்டம் பணகுடி அருகே சொத்து வாங்க கொடுத்த 3 லட்ச ரூபாய் பணத்தை ஏமாற்றிய தாய்மாமன் மீது நடவடிக்கை எடுக்க கோரி இளம் பெண் செல்போன் டவரில் ஏறி தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு. அரை மணி நேரம் போராட்டத்திற்கு பின்பு தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டனர்.
நெல்லை மாவட்டம் பணகுடி அருகேயுள்ள தெற்கு வள்ளியூரை சேர்ந்த கணபதி மகள் ஜெய மீனா (வயது 30). இவரது தாய் மாமா அதே ஊரைச் சேர்ந்தவர் பெரியசாமி.
ஜெய மீனா கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நிலம் வாங்குவது தொடர்பாக தாய் மாமன் பெரியசாமியிடம் 3.50 லட்சம் ரூபாய் பணம் கொடுத்துள்ளார்.
ஆனால் பெரியசாமி ஜெய மீனா பெயரில் நிலம் வாங்காமல் அவரது பெயரில் நிலம் வாங்கியுள்ளார். இது குறித்து கடந்த மூன்று ஆண்டுகளாக ஜெய மீனா தான் கொடுத்த பணத்தை திருப்பி தருமாறு பெரியசாமியிடம் கேட்டுள்ளார்.
அதற்கு பெரியசாமி பணத்தை கொடுக்காமல் இழுத்தடித்து வந்துள்ளார்.
இதுகுறித்து பணகுடி போலீசில் ஜெய மீனா புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால் அதிருப்தி அடைந்த ஜெய மீனா இன்று காலையில் தெற்கு வள்ளியூர் மெயின் ரோட்டில் உள்ள தனியார் செல்போன் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த வள்ளியூர் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து ஜெய மீனாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவரை பத்திரமாக கீழே இறக்கினர். இது குறித்து பணகுடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
