

எடப்பாடியை தனி மாவட்டமாக அறிவித்தாலும் பவானியை எடப்பாடி மாவட்டத்துடன் இணைக்க அனுமதிக்க மாட்டோம் என்று அமைச்சர் கே.சி.கருப்பணன் தெரிவித்துள்ளார். கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கவுந்தப்பாடியில் பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், எடப்பாடியை தனி மாவட்டமாக அறிவித்தாலும் பவானியை எடப்பாடி மாவட்டத்துடன் இணைக்கப்பட மாட்டாது என்று தெரிவித்தார். இதனால் பவானி பகுதியை சேர்ந்தவர்கள் அச்சமடையத் தேவை இல்லை என்று அமைச்சர் கே.சி.கருப்பணன் கூறினார். முன்னதாக நிகழ்ச்சியில் பேசிய அவர், தமிழகத்தில் டி.வி. நாடகங்களை தடை செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மக்கள் செய்தி தொலைக்காட்சி சேனல்களை கண்டு நாட்டு நடப்பை தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.