Minerals Export | தமிழகத்தில் திடீர் தடை.. விலை குறைய வாய்ப்பு? - இந்த நொடி முதல் அமல்
தமிழகத்தில் இருந்து கனிம வளங்கள் எடுத்து செல்ல தற்காலிக தடை தமிழகத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு கருங்கல் உள்ளிட்ட கனிம வளங்கள் எடுத்து செல்ல தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது...
புதுச்சேரி, காரைக்காலைத் தவிர மற்ற மாநிலங்களுக்கு பதப்படுத்தப்படாத கற்களின் ஏற்றுமதிக்கு 3 மாதங்கள் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் கற்கள் மற்றும் திரட்டுப் பொருட்களின், போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் உத்தரவும் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. மாநிலத்திற்குள் போதிய கனிம விநியோகத்தை உறுதி செய்ய, பிற மாநிலங்களுக்கு கனிமங்கள் கொண்டு செல்வதை புவியியல் மற்றும் சுரங்கத் துறை இயக்குநர் ஒழுங்குபடுத்தவும், தேவையெனில் தற்காலிகத் தடை விதிக்கவும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அண்டை மாநிலங்களுக்கு கனிமங்கள் அதிகளவில் கொண்டு செல்லப்படுவதால் சாலைகள் சேதமடைந்து, போக்குவரத்து நெரிசல், விபத்துகள் மற்றும் உயிரிழப்புகள் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் உள்கட்டமைப்பு, வீடுகள் மற்றும் தொழில் வளர்ச்சிக்கான அதிகரித்துள்ள உள்ளூர் தேவையை பூர்த்தி செய்ய, மாநிலத்தில் உற்பத்தியாகும் செதுக்கப்படாத கற்கள் மற்றும் ஜல்லிக்கற்கள் போதுமானதாக இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்டை மாநிலங்களுக்கு கட்டுமானக் கற்கள் அதிகளவில் கொண்டு செல்லப்படுவதால், மாநிலத்தில் கட்டுமானப் பொருட்கள் தட்டுப்பாடு ஏற்பட்டு, விலை உயர்வால் உள்கட்டமைப்புத் திட்டங்கள் பாதிக்கப்படுகின்றன. எனவே, 2011-ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டவிரோத கனிமச் சுரங்கம், கனிமப் போக்குவரத்து மற்றும் சேமிப்பு, கனிம வியாபாரிகள் தடுப்பு விதிகள் விதி 3(A)-ன் கீழ் வழங்கப்பட்ட அதிகாரத்தின்படி, மாநிலத்திற்குள் கனிமங்களின் சீரான விநியோகம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சட்டவிரோத கனிமக் கடத்தலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடை உடனடியாக அமலுக்கு வந்து, 3 மாதங்கள் நடைமுறையில் இருக்கும் என்றும்; உத்தரவை மீறுவோர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அதை தொடர்ந்து, எல்லை மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கனிமப் போக்குவரத்தை தீவிரமாகக் கண்காணிக்கவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
