அரசியல் கட்சியினர் மேயர் பதவியை பிடிப்பதற்கு மட்டுமே ஆர்வம் - உயர்நீதிமன்றம் அதிருப்தி

அரசியல் கட்சியினர் மேயர் பதவியை பிடிப்பதற்கு மட்டுமே ஆர்வம் காட்டுவதாக சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
அரசியல் கட்சியினர் மேயர் பதவியை பிடிப்பதற்கு மட்டுமே ஆர்வம் - உயர்நீதிமன்றம் அதிருப்தி
Published on

சென்னை மாநகராட்சியில், சொத்து வரி வசூல் செய்ய விதிகளை வகுக்கும்படி மாநகராட்சிக்கும், அரசுக்கும் உத்தரவிட வேண்டும் என வழக்கறிஞர் மேனன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன் , வேல்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு, சென்னை மாநகராட்சி ஆணையர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, ஆஜரான கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன், அரசின் அவசர பணியாக டெல்லி செல்வதால் மாநகராட்சி ஆணையர் நேரில் ஆஜராக முடியவில்லை என தெரிவித்தார். மாநகராட்சி ஆணையர் ஆஜராக கால அவகாசமும் கோரினார். இதையடுத்து சொத்துவரியை உயர்த்தாமல் அரசு தூங்கி கொண்டிருப்பதாக நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர். கடந்த 20 ஆண்டுகளில் 4 முறை சொத்து வரியை உயர்த்தி இருக்க வேண்டும் என நீதிபதிகள் கூறினர். மேயர் பதவியை பிடிப்பது என்பதில் மட்டுமே அரசியல் கட்சியினர் ஆர்வம் காட்டுவதாக கூறிய நீதிபதிகள் , சொத்துவரி உயர்த்தாதது குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர், மற்றும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் ஆகியோர் வரும் 18 ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டனர்.

X

Thanthi TV
www.thanthitv.com