சுற்றி குழந்தைகள் இருக்க 4ம் வகுப்பு சிறுமிக்கு நடந்த சகிக்கவே முடியா அசிங்கம் - வீடியோவை பார்த்து பள்ளியை சூறையாடிய மக்கள்
நொறுங்கிய கண்ணாடி ஜன்னல்கள்....
கையில் கிடைத்ததை எல்லாம் ஆயுதமாக்கி போர்தொடுத்த மக்கள்...
சாலையை மறித்து போராட்டத்தில் இறங்கிய கிராமவாசிகள்...
இப்படி ஒரு ஊரே தங்களது பிள்ளைகள் படிக்கும் பள்ளியை சூறையாடி, கிராமத்தை கலவரக்காடாக மாற்றக்காரணம், இந்த பகீர் சிசிடிவி காட்சி தான்...
பட்டப்பகலில் பள்ளிக்குள் புகுந்து பல மாணவர்களின் முன்னிலையில், 4 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தால் எந்த மனிதனால் தான் பார்த்து கொண்டிருக்க முடியும்...
அந்த பயங்கரத்தை இத்தனை தைரியத்துடன் செய்தது அந்த பள்ளியின் அரங்காவலர்...
ஆம்... திருச்சி மாவட்டம் மணப்பாறையில் உள்ள மணப்பாறைபட்டி சாலையில் செயல்பட்டு வருகிறது ஒரு தனியார் சிபிஎஸ்இ பள்ளி. அருகில் உள்ள ஊர்களை சேர்ந்த பல மாணவர்கள் இந்த பள்ளியில் பயின்று வருகிறார்கள்.
அதில் ஒருவர் தான் பாதிக்கப்பட்ட 4 ஆம் வகுப்பு மாணவி... சம்பவத்தன்று வழக்கம் போல் பள்ளிக்கு வந்த சிறுமி மதிய நேரத்தில் வகுப்பறையில் அமர்ந்திருந்துள்ளார்.
அப்போது பள்ளியின் அறங்காவலர் வசந்தகுமார் என்பவர் வகுப்பறைக்குள் புகுந்து, அங்கும் இங்கும் சுற்றிப்பார்த்துவிட்டு நேராக மாணவியின் அருகில் சென்று அமர்ந்திருக்கிறார்.
54 வயதான வசந்தகுமார், தனக்கு பேத்தி வயது கொண்ட அந்த சிறுமியிடம் பாசமாக பேச்சுக்கொடுத்து அவர் மீது கை வைத்திருக்கிறார்.
வசந்தகுமாரின் வக்கிரச்செயல்கள் சிறுமிக்கு அசௌகரியத்தை ஏற்படுத்த, வகுப்பறையை விட்டு வெளியே எழுந்து ஓடி இருக்கிறார்.
மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்ற சிறுமி, நடந்ததை அப்படியே பெற்றோரிடம் கூறி அழுது புலம்பி உள்ளார். மகளின் வார்த்தைகளை கேட்டு நடுங்கிய பெற்றோரும் உறவினர்களும் அடுத்த கணமே பள்ளிக்கு சென்று அறங்காவலர் வசந்தகுமாரை அடித்து வெளுத்திருக்கிறார்கள்.
இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மணப்பாறை போலீசார், தர்ம அடி வாங்கிய வசந்தகுமாரை மீட்டு மருத்துவமனையில் சேர்ந்தனர்.
ஆத்திரத்தில் பள்ளிக்குள் புகுந்து அலுவலக அறையின் கண்ணாடியை அடித்து உடைத்தோடு, அங்கிருந்த காரையும் நொறுக்கி இருக்கிறார்கள்.
அத்தோடு பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபர் மற்றும் பள்ளி நிர்வாகிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாணவியின் குடும்பத்தினரும் ஊர்மக்களும் ஒன்று சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் திருச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள
நொச்சிமேடு என்ற இடமே ஸ்தம்பித்து போனது.
இதையடுத்து திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் செல்வநாகரெத்தினம் தலைமையிலான போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சாமாதனம் பேசி அனுப்பி வைத்தார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், பள்ளியின் அறங்காவலர் வசந்தகுமார், நிர்வாகிகளான மராச்சி, செழியன், சுதா ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
மேலும் தலைமறைவான பள்ளியின் தலைமை ஆசிரியை விஜயலெட்சுமியை போலீசார் தேடிவந்த நிலையில், அவர் இன்று காலை மணப்பாறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சரணடைந்திருக்கிறார்.
கைது செய்யப்பட்டவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் போலீசார், வசந்தகுமாரின் இந்த வக்கிரசெயல்களுக்கு வேறு யாரேனும் உடைந்தயாக இருந்தார்களா? இன்னும் எத்தனை சிறுமிகள் இதுபோல் பாதிக்கப்பட்டுள்ளனர்? போன்ற பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் பெரும் அதிர்வை ஏற்படுத்தியிருந்த நிலையில், மாவட்ட கல்வி அலுவலர் பேபி மற்றும் அதிகாரிகள் அந்த பள்ளி மாணவிகளிடமும், பெற்றோரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தியிருக்கிறார்கள். முழு விசாரணைக்கு பிறகே மீண்டும் எப்போது பள்ளி திறக்கப்படும் என்பதையும், தேர்வுகள் நடைபெற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் அறிவித்திருக்கிறார்கள்.
