மனைவி கர்ப்பமான தகவலை கேட்டதும் அத்தை, சித்தி, சித்தப்பாவை கொன்ற நபர்
ராணிப்பேட்டை மாவட்டம் கொடைக்கல் அடுத்த புதுக்குடியானூர் கிராமத்தை சேர்ந்த பாலுவுக்கும், கீழ்புதுப்பேட்டையை சேர்ந்த புவனேஸ்வரிக்கும் காதல் திருமணமாகி, 4 ஆண்டுகள் ஆன நிலையில் இந்த தம்பதிக்கு 3 வயதில் குழந்தை உள்ளது. இந்நிலையில் பாலுவின் சித்தப்பா மகனான விஜய் என்பவருக்கும், புவனேஸ்வரிக்கும் ஏற்பட்ட நட்பு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியதாக கூறப்படுகிறது. இதனால் பாலுவுடன் அடிக்கடி சண்டை போட்டு அவரை பிரிந்து புவனேஸ்வரி தனது தாயார் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், புவனேஸ்வரி 8 மாத கர்ப்பிணியாக உள்ளதை அறிந்து ஆத்திரமடைந்த பாலு, இரவு மதுபோதையில் தனது மனைவியை கொல்ல திட்டமிட்டு மாமியார் வீட்டிற்குச் சென்றுள்ளார். பாலுவை கண்டதும் புவனேஸ்வரி ஓடி ஓளிந்த நிலையில், மாமியார் பாரதியை கத்தியால் வெட்டி கொன்றுவிட்டு பாலு தப்பியுள்ளார். மேலும், விஜய்யை கொல்ல திட்டமிட்டுச் சென்றபோது வீட்டில் அவர் இல்லாததால், அவரது தந்தை அண்ணாமலை மற்றும் தாயார் ராஜேஸ்வரியை இரும்புராடால் தாக்கி கொன்றுள்ளார். இதையடுத்து, கொளத்தேரி ரயில்வே கேட் பகுதியில் பதுங்கியிருந்த பாலுவை வாலாஜாபேட்டை போலீசார் கைது செய்ய முயன்றனர். அப்போது தப்பியோட முயன்ற பாலு, கால் தடுமாறி கீழே விழுந்ததில் கால் முறிவு ஏற்பட்டு வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
