மதுரை முத்துப்பட்டி பகுதியில் கடந்த 25ஆம் தேதி பிரபல ரவுடி சவுந்தர பாண்டியன் என்பவரை மர்ம கும்பல் ஒன்று வீடு புகுந்து கொடூரமாக வெட்டிக் கொன்றது. அதோடு ஆத்திரம் அடங்காத அந்த கும்பல், சவுந்தரபாண்டியன் தலையை துண்டித்து, குப்பையில் வீசி சென்றது. மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக , போலீசார் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்த நிலையில், தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி பிள்ளையார் கணேஷ் மற்றும் அவரது கூட்டாளிகள் ராம்குமார், தமிழ்ச்செல்வன், முகமது, மனோஜ், உமா மகேஷ்வரன் ஆகியோர் போலீசார் வசம் சிக்கியுள்ளனர். அவர்களை கைது செய்த தனிப்படை போலீசார், சம்பவம் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.