சங்கராபுரம் பஞ்சாயத்து தேர்தலில் அதிமுக ஆதரவாளர் வெற்றி பெற்றதாக அறிவித்தது செல்லாது - உயர்நீதிமன்றம்
சிவகங்கை மாவட்டம் சங்கராபுரம் பஞ்சாயத்து தேர்தலில் முதலில் காங்கிரஸ் ஆதரவு வேட்பாளர் தேவி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அதன்பிறகு அதிமுக ஆதரவாளர் பிரியதர்ஷினி வெற்றி பெற்றதாக அறிவித்ததோடு இரண்டு பேருக்கும் வெற்றி சான்றிதழ் வழங்கப்பட்டதால் குழப்பமான சூழல் ஏற்பட்டது. இதையடுத்து சிவகங்கை மாவட்டம் காரைக்குடி செக்காலை கோட்டையை சேர்ந்த தேவி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், சங்கராபுரம் பஞ்சாயத்து தலைவியாக பிரியதர்ஷினி பொறுப்பேற்க இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் துரைசுவாமி, ரவீந்திரன் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது முதலில் தேர்தல் அதிகாரி வழங்கிய சான்றிதழ் தான் செல்லுபடியாகும் என கூறிய நீதிபதிகள், சான்றிதழ் வழங்கியதோடு தேர்தல் அதிகாரியின் பணி முடிந்து விட்டது என்றும் அடுத்த சான்றிதழ் வழங்க அவருக்கு உரிமையில்லை என்றும் தெரிவித்தனர். இதையடுத்து காங்கிரஸ் ஆதரவு வேட்பாளர் தேவியின் வெற்றியே செல்லும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
