மதுரை மாநகராட்சி வரி முறைகேடு - 3 நபர்களுக்கு ஜாமின் வழங்கிய நீதிமன்றம்
மதுரை மாநகராட்சியில் 200 கோடி ரூபாய் சொத்து வரி முறைகேடு வழக்கில் தொழில் நுட்ப உதவியாளர் உட்பட 3 நபர்களுக்கு நிபந்தனையுடன் ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.
மதுரை மாநகராட்சியில் 200 கோடி ரூபாய் சொத்து வரி முறைகேடு வழக்கில் இதுவரை 17 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் உள்ள ஓய்வு பெற்ற உதவி கமிஷ்னர் ரெங்கராஜன், கணினி ஆப்ரேட்டர் கார்த்திக் உள்ளிட்ட 8 பேர் ஜாமின் கோரி உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணையில் கணினி உள்ளிட்ட தொழில்நுட்பக் கருவிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருவதால் விசாரணை பாதிக்கும் என அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மனுதாரர்கள் தரப்பில், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாகக் கூறி ஜாமின் வழங்க வேண்டும் என வாதிட்டனர். சிறையில் உள்ள தொழில் நுட்ப உதவியாளர் தனசேகர், கார்த்திக் ,பாலமுருகன் ஆகிய மூன்று பேருக்கு நிபந்தனையுடன் ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. நாள்தோறும் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. மற்றவர்களின் ஜாமின் மனுக்கள் மீதான விசாரணை செப்டம்பர் 8 ம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
