"மதுரையில் கொரோனா தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

மதுரையில் வைகை ஆற்றை மேம்படுத்த 84 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற கொரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆய்வு கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மதுரையில் கொரோனா தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவதாக கூறினார். உலக சுகாதார அமைப்பு, ஐசிஎம்ஆர். வழிகாட்டுதலின்படி கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருதாகவும், பாதிக்கப்பட்டவர்களை கண்டறிய வீடு வீடாக மருத்துவ பரிசோதனை செய்யப்படுவதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார். அரசின் சிறப்பான நடவடிக்கையால் கொரோனா பரவல் கட்டுப்பாட்டுக்குள் உள்ளதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார். மதுரை மக்கள் உயர்தர சிகிச்சை பெற எய்ம்ஸ் மருத்துவமனை அமையப் பெற உள்ளதாகவும், மதுரையில் புற்றுநோய் சிறப்பு சிகிச்சை மையத்திற்கு 25 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார். மதுரை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை பட்டியலிட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி , வைகை ஆற்றை மேம்படுத்த 84 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

X

Thanthi TV
www.thanthitv.com