கொரோனா காரணமாக மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கு நிகழ்விற்குத் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று காலை கோவில் வளாகத்திலேயே அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெற்றது. அதற்காக அழகர் கோவில் வளாகத்திலேயே, வைகை ஆற்றைப் போன்று செயற்கையாக வடிவமைக்கப்பட்ட இடத்தில், கள்ளழகர் இறங்கினார். இந்நிகழ்வில் பக்தர்கள் பங்கேற்க அனுமதியில்லை. இது குறித்து கருத்து தெரிவித்த பக்தர்கள் கொரோனா காரணமாக இந்த முறை கோவில் வழக்கமான கூட்டம் இன்றி காணப்பட்டதாகக் கூறினர். மேலும், 2 ஆண்டுகளாக அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வைக் காணாதது வருத்தம்தான் என்றும், அடுத்த ஆண்டாவது அழகர் குதிரையில் எழுந்தருளி வைகை ஆற்றில் இறங்குவார் என்ற நம்பிக்கையில் காத்திருப்பதாகவும் தெரிவித்தனர்.