Lovers | Love Issue | காதலியை ஒளித்து வைத்த அப்பா - அசால்ட்டாக தூக்கிய காதலன்

x

24 மணி நேரமும் உறவினர்களின் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்த காதலியை கண் இமைக்கும் நேரத்தில் அழைத்துச் சென்ற பகீர் காட்சி தான்.

சில மணி துளிகளுக்கு முன்பு கூட அக்கா குழந்தையை பட்டுக்குட்டி... என் தங்கமே..... செல்லமே... என கொஞ்சி கொண்டிருந்த அந்த இளம்பெண், நடந்த களேபரத்தில் அந்த குழந்தையின் காதில் காயம் ஏற்பட்டு ரத்தம் வருவதை கூட அறியாமல் காதலனோடு காரில் ஏறி சீட்டாக பறந்து சென்றிருக்கிறார். இளம்பெண் எடுத்த இந்த அதிரடி முடிவிற்கு காரணம், வெறும் காதல் மயக்கம்..

என்ன நடந்தது என்கிற முழுக் குற்றப்பின்னணியையும் விசாரணையில் களமிறங்கினோம்.

அரியலூர் மாவட்டம் கிழப்பழுவூர் கிராமத்தை சேர்ந்தவர் 23 வயதான அனுஷியா. இவர் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார்.


சில வருடங்களுக்கு முன்பு அனுஷியாவிற்கு இன்ஸ்டாகிராம் மூலம் புதுக்கோட்டை மாவட்டம் மாங்குடி கிராமத்தை சேர்ந்த குமரேசன் என்பவரோடு பழக்கம் ஏற்பட்டு அது நாளடைவில் காதலாக பரிணமித்திருக்கிறது.

சிங்கப்பூரில் பணியாற்றி வந்த குமரேசனும், அனுஷியாவும் இன்ஸ்டாகிராம் மூலம் காதலை வளர்த்து வந்துள்ளனர்.

இந்த சூழலில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு குமரேசன் விடுமுறையில் சொந்த ஊருக்கு திரும்பி உள்ளார். காதலர்கள் அவர்கள் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர்.

ஆனால், அதற்கு இரண்டு தரப்பிலிருந்தும் சம்மதிக்க வில்லை என தெரிகிறது.

இதன் தொடர்ச்சியாக அனுஷியா, செவிலியர் பணிக்காக சென்னை செல்வதாக பொய் சொல்லிவிட்டு காதலனோடு திருச்சியிலுள்ள லாட்ஜில் அறையெடுத்து ஒரு வார காலம் தங்கி உள்ளார். இந்த விவரம் குமரேசனின் பெற்றோர் மூலம் அனுஷியாவின் வீட்டிற்கு தெரியவர அதிர்ந்து போயிருக்கிறார்கள்.

திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி சிங்கப்பூர் ரிட்டன் தங்களுடைய மகளை ஏமாற்றிவிடுவார் என பயந்துள்ளனர்.

அதன்காரணமாக, அனுஷியாவை காதலனிடமிருந்து பிரித்து வீட்டிற்கு அழைத்து வந்த பெற்றோர், அவரை சின்ன பட்டாக்காடு கிராமத்திலுள்ள அக்கா வீட்டில் சிறைப்பிடித்து வைத்துள்ளனர்.

அனுஷியாவின் செல்போனையும் பறித்து காதலனுடனான தொடர்பை துண்டித்துள்ளனர். இந்த சூழலில் தான் அனுஷியா எப்படியோ தான் இருக்குமிடத்தின் கூகுள் மேப் லோகேஷனை காதலனோடு பகிர்ந்து சிக்னல் கிடைச்சதும், சிட்டா பறந்து வந்துருவேன் என Code Word மூலம் செய்தி அனுப்பியதாக சொல்லப்படுகிறது.

அதே நேரம், நாடோடிகள் படப்பாணியில் சிங்கப்பூர் ரிட்டனுக்கு உதவ அவரின் நண்பர்களும் முன்வந்துள்ளனர்.

நாங்க இருக்குற வரைக்கு இந்த காதலுக்கும், காதலர்களுக்கும் அழிவே கிடையாதென்கிற ரேஞ்சில் சபதம் எடுத்தவர்கள் வாடகை கார் எடுத்து அனுஷியா அனுப்பிய லோகேஷனுக்கு சென்று முதலில் வேவு பார்த்துள்ளனர்.

அதன்பிறகு, கையில் மஞ்ச பை மற்றும் திருமண பத்திரிக்கை எடுத்து கொண்டு கிராமத்திற்குள் காரில் நுழைந்த அந்த கும்பல் இன்விடேஷன் கொடுக்க வந்த உறவினர்களை போல அனுஷியாவின் அக்கா வீட்டிற்கு சென்றுள்ளனர்.

அந்த சமயத்தில் காரிலயே அமர்ந்திருந்த குமரேசன், காதலிக்கு சிக்னல் கொடுத்துள்ளார். காதலனின் நண்பர்கள் தூதுவனாக வந்துவிட்டதை பார்த்ததும் அனுஷியா காதலன் அமர்ந்திருந்த காரில் ஓடிச்சென்று ஏறி உள்ளார். இதனை பார்த்ததும் அனுசியாவின் அக்கா கத்தி கூச்சலிட்டு உதவிக்கேட்டு ஊரை அழைத்துள்ளார்.

அனைவரும் ஒன்றுக்கூடி விட, மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அனைவரையும் குமரேசனின் நண்பர்கள் மிரட்டி உள்ளனர். அதன்பிறகு அவர்கள் வந்திருந்த காரில் ஏறி எதிரில் வரும் பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் மின்னல் வேகத்தில் பாய்ந்து சென்றிருக்கிறார்கள்.

நடந்த களேபரத்தில் அனுஷியாவின் அக்கா குழந்தையின் காதில் வெட்டுக்காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்திருக்கிறது. இதைதொடர்ந்து பெண் வீட்டார் அனுஷியாவை மீட்டு தரக்கோரி காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளனர்.

காதலர்கள் இருவரும் மேஜர் என்பதால் போலீஸார் இரண்டு தரப்பிலும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பதற்றத்தை தவிர்த்து சமாதானப்படுத்தும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

காதலை சேர்த்து வைப்பதற்காக நாடோடிகள் படப்பாணியில் நண்பர்கள் களமிறங்கி காதலியை வீடு புகுந்து அழைத்துச் சென்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்