

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனையால் விழுப்புரத்தில் ஒரு குடும்பமே தற்கொலை செய்துகொண்ட நிலையில், பல்வேறு மாவட்டங்களில் லாட்டரி விற்பனை கொடி கட்டி பறப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அது பற்றிய ஒரு செய்தித்தொகுப்பை பார்க்கலாம்.....
ஒரு காலத்தில் பட்டிதொட்டி எங்கும், கொடி கட்டி பறந்த லாட்டரி சீட்டு விற்பனையால், பல குடும்பங்கள் தெருவுக்கு வந்தன. இதைத்தொடர்ந்து, கடந்த 2003-ம் ஆண்டு லாட்டரி சீட்டுக்கு தமிழக அரசு தடை விதித்தது.
ஆனால், கேரளா உள்பட இந்தியாவின் 13 மாநிலங்களில் லாட்டரி சீட்டு விற்பனைக்கு தடை எதுவும் விதிக்கப்படவில்லை. தமிழகத்தை சேர்ந்தவர்கள், மற்ற மாநிலங்களில் லாட்டரி சீட்டுகளை வாங்க எந்தத் தடையும் விதிக்கப்படாததால், இதை பயன்படுத்திக்கொண்ட சில ஏஜெண்டுகள், அண்டை மாநிலங்களில் இருந்து லாட்டரி சீட்டுகளை வாங்கி விற்பனை செய்து கமிஷன் பெற்று வருகின்றனர். இதனால், தமிழகத்தில் லாட்டரி தொழில் மறைமுகமாக கொடிகட்ட பறக்கிறது.
தமிழகத்தில் மூன்று எண் லாட்டரி சீட்டு விற்பனை, களைகட்டி வருகிறது. மூன்று எண்களை கண்டுபிடித்து அந்த எண் கொண்ட சீட்டை வாங்கினால், அதற்கு ஏற்ற பரிசுத்தொகை வழங்கப்படுகிறது. இதை நம்பி ஏராளமானோர் லாட்டரி சீட்டு மீது மோகம் கொண்டு, பரிசுத்தொகை விழும் என்ற நம்பிக்கையில், அன்றாடம் உழைத்து சேர்க்கும் பணத்தை கொண்டு, அதை வாங்குகின்றனர். இப்படி கடன் உடன் வாங்கி, லாட்டரி சீட்டு வாங்கிய நிலையில், பரிசு விழாமல் போனதால், விரக்தியடைந்த விழுப்புரத்தை சேர்ந்த நகை தொழிலாளி அருண், குடும்பத்தோடு தற்கொலை செய்துக்கொண்டார். இந்த சம்பவம் விழுப்புரம் மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.