இவ்வளவு வேகமா..!? வெற்றி மாலை போடுவதற்குள் கட்சி மாறிய வேட்பாளர்கள் | Local Body Election 2022
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், தங்களது பிரதிநிதிகளை மக்கள் தேர்ந்தெடுக்க, வெற்றி பெற்றவர்களோ வெற்றியை ருசித்த சில நிமிடங்களிலேயே தங்கள் விருப்பத்திற்கேற்ப கட்சி மாறியது ஆங்காங்கே நிகழ்ந்தது.
சோழவந்தான், மதுரை
மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சியில் 9வது வார்டில் வெற்றி பெற்றவர் சத்தியபிரகாஷ். அமமுக வேட்பாளராக களமாடியவர், வெற்றிக்கு பின்னர் அமைச்சர் பி. மூர்த்தி முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
மேலூர், மதுரை
மதுரை மாவட்டம் மேலூர் நகராட்சி 9வது வார்டில் 15 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளரை வீழ்த்தி வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர் அருண்சுந்தரபிரபு, அன்றைய தினமே அமைச்சர் மூர்த்தி முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
திண்டுக்கல்
இதுஒருபக்கம் இருக்க, திண்டுக்கல் மாநகராட்சியில் சுயேட்சையாக நின்று போட்டியிட்ட அதிமுக முன்னாள் நகரசபை உறுப்பினர் உட்பட நான்கு பேர் அமைச்சர்கள் ஐ. பெரியசாமி மற்றும் சக்கரபாணி முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.
கரம்பக்குடி, புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் கரம்பக்குடி 7வது வார்டில் அமமுக வேட்பாளர் பிரிதிவிராஜ் வெற்றி பெற, அறிவிப்பு வெளியான சில நிமிடங்களிலேயே முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.
ஆவடி
ஆவடி மாநகராட்சியில் 14வது வார்டில் வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர் ராஜேஷ், திடீர் திருப்பமாக அமைச்சர் நாசர் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்
