Kovai | ஆம்னியில் சிக்கிய ரூ.37 லட்சம் தங்க நகைகள்.. கையோடு எடுத்து சென்ற அதிகாரிகள்
கோவை மாவட்டம் சூலூர் அருகே சிந்தாமணிபுதூர் டோல்கேட் அருகே உரிய ஆவணங்களின்றி கடத்தி வரப்பட்ட சுமார் 37 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளை அதிகாரிகள் அதிரடியாகப் பறிமுதல் செய்தனர். சிந்தாமணிபுதூர் டோல்கேட் பகுதியில் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அந்த வழியாக வந்த ஒரு தனியார் ஆம்னி பேருந்தை நிறுத்திச் சோதனை செய்தனர். அப்போது அந்தப் பேருந்தில் வந்த கோயம்புத்தூர் சித்தி விநாயகர் கோவில் வீதி, மங்களா ஜுவல்லரி பில்டிங்கில் வசித்து வரும் மது சுதன் ராணா என்பவரின் மகன் அனுப் ராணா (37) என்பவரிடம் சோதனை நடத்தப்பட்டது. அவர் வைத்திருந்த பையில் சுமார் 255 கிராம் எடையுள்ள தங்க நகைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நகைகளை எடுத்துச் செல்வதற்கான உரிய ஆவணங்கள் அவரிடம் இல்லாததால், சுமார் 37 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள அந்த நகைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர், பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் மற்றும் பிடிபட்ட நபரை அதிகாரிகள் சூலூர் தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர். இது குறித்து வருவாய்த் துறையினர் மற்றும் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
