தமிழக - கேரள நதி நீர் பிரச்சினைக்கு தீர்வு காண ஐவர் குழு : 2 மாநில முதலமைச்சர்கள் பேச்சுவார்த்தையில் உடன்பாடு

தமிழகம் - கேரளா இடையேயான நதி நீர் பிரச்சினை குறித்து, தீர்வு காண, தலைமை செயலாளர் உள்ளிட்ட 5 அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது.
தமிழக - கேரள நதி நீர் பிரச்சினைக்கு தீர்வு காண ஐவர் குழு : 2 மாநில முதலமைச்சர்கள் பேச்சுவார்த்தையில் உடன்பாடு
Published on

தமிழகம் - கேரளா இடையேயான நதி நீர் பிரச்சினை குறித்து, தீர்வு காண, தலைமை செயலாளர் உள்ளிட்ட 5 அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது. 2017 ம் ஆண்டு, தமிழகம் வந்திருந்த கேரள முதலமைச்சர் பினராயி விஜயனிடம், இரு மாநில நதி நீர் பிரச்சினையை பேசி தீர்க்க முன்வருமாறு, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை விடுத்திருந்தார். இதனடிப்படையில், பினராயி விஜயன் அழைப்பை ஏற்று, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திருவனந்தபுரம் சென்றார்.

வரவேற்புக்குப்பின், அங்கு மஸ்கட் ஹோட்டலில், இரு மாநில முதலமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் சந்திப்பு நிகழ்ந்தது. இந்த பேச்சுவார்த்தையில், தமிழகம் - கேரள இடையேயான நதிநீர் பிரச்சினைக்கு சுமூக தீர்வு காண்பது என உடன்பாடு ஏற்பட்டது. பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, நதி நீர் பிரச்சினையை தீர்க்க, 5 அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை தொடர்ந்து, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், பேச்சுவார்த்தை விவரங்கள் குறித்து விளக்கம் அளித்தார். அப்போது, தமிழகமும், கேரளாவும், இரு சகோதரர்கள் என பினராயி விஜயன் பெருமிதத்துடன் குறிப்பிட்டார். முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டத்தை அதிகரிக்கும் விவகாரத்தில் சுமூக தீர்வு காண்பது என்றும் இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டது.

இதுதவிர, பரம்பிக்குளம் - ஆழியாறு மற்றும் பாண்டியாறு - புன்னம்புழா ஆறுகளில் தண்ணீர் விடுவது, புதிய நீர் மின் திட்டங்கள் உருவாக்குவது, கேரளாவில் கடலில் கலக்கும் உபரி நதி நீரை தமிழகத்திற்கு திருப்புவது உள்ளிட்ட அம்சங்கள் குறித்தும், இந்த சந்திப்பில், இரு மாநில முதலமைச்சர்களும் விவாதித்தனர். 2004 ம் ஆண்டு, அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்குப்பின், தமிழக - கேரள முதலமைச்சர்கள், இப்போது சந்தித்து பேசியிருப்பது, முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

X

Thanthi TV
www.thanthitv.com