

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நள்ளிரவில் ஒருவர் தீப்பிடித்து எரிந்த நிலையில் கிடப்பதாக தான்தோன்றி மலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் அவரின் உடல் அருகே டூரிஸ்ட் வேன் ஒன்று நிற்பதும் தெரியவந்தது. அந்த வேனில் போலீசார் செய்த சோதனையில் உயிரிழந்தவருக்கு சொந்தமானது தான் அந்த டூரிஸ்ட் வேன் என உறுதியானது. உயிரிழந்தவர் பசுபதிபாளையத்தை சேர்ந்த பாஸ்கர் என்பதும், டூரிஸ்ட் வேன்களை வைத்து தொழில் செய்து வந்ததும் தெரியவந்தது. டூரிஸ்ட் வேனை பழுது நீக்க தனியார் நிறுவனம் ஒன்றில் பாஸ்கர் கொடுத்த நிலையில் அதற்கு கட்டணமாக 2 லட்சத்து 61 ஆயிரம் ரூபாய் பணம் வந்துள்ளது. ஆனால் அந்த பணத்தை அவர் திருப்பி செலுத்த இயலாததால் வாகனத்தை திருப்பி தர முடியாது என நிறுவனத்தினர் கூறியதால் வேதனையில் இந்த முடிவை அவர் எடுத்திருப்பதாகவும் தெரியவந்தது. உயிரிழந்த பாஸ்கருக்கு மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ள நிலையில் அவரின் மரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.