“இவர் எப்படி உயிரோடு வந்தார்..?“ கால் இருக்கா? ஒரு நொடி ஷாக்கான நீதிபதி - ஐகோர்டில் பரபரப்பு

“இவர் எப்படி உயிரோடு வந்தார்..?“ கால் இருக்கா? ஒரு நொடி ஷாக்கான நீதிபதி - ஐகோர்டில் பரபரப்பு
Published on

சென்னை சவுகார்பேட்டையை சேர்ந்தவர் நந்த கிஷோர் சந்தக்... இவர் கடந்த 2017ம் ஆண்டு காவல்நிலையத்தில் தனது உறவினர் கொலை மிரட்டல் விடுத்து வருவதாக புகார் ஒன்றை அளித்தார்.இந்தப் புகாரின் அடிப்படையில், நந்த கிஷோர் சந்தக்கின் உறவினரான கீழ்ப்பாக்கம் பகுதியை சேர்ந்த ராதேஷ் சியாம் சந்தேக் உள்ளிட்ட ஆறு பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

முதலில், கொலை மிரட்டல் என வழக்குப்பதிவு செய்த போலீசார், அதன் பிறகு கொலை முயற்சி என வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் மூன்றாவது முறையாக, கொலை முயற்சி என்ற வழக்கை மாற்றி, கொலை வழக்காக பதிவு செய்தனர்.ஒரே ஒரு புகார், கொலை மிரட்டலில் தொடங்கி கொலை வழக்கில் முடிந்த நிலையில், இதில் ஆச்சரியம் என்னவென்றால், கீழமை நீதிமன்றத்தில் வழக்கின் விசாரணையும் நடந்து வந்துள்ளது.

தங்கள் மீதான வழக்குகளை ரத்து செய்யக்கோரி ராதேஷ் சியாம் சந்தேக் உள்ளிட்ட 6 பேரும், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.அந்த மனுவில், நந்த கிஷோர் சந்தக் தனது சித்தப்பா எனவும், தங்களுக்கு இடையே சொத்து பிரிச்சினையில் சமரசம் ஏற்பட்டு விட்டதால், வழக்கை ரத்து செய்ய வேண்டுமெனவும் ராதேஷ் சியாம் சந்தேக் கோரிக்கை விடுத்திருந்தார்.இந்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, கொலை வழக்கில் எப்படி சமரசம் செய்ய முடியும் என கேள்வி எழுப்பிய நீதிபதி, அதற்கு ராதேஷ் தரப்பு வழக்கறிஞர் அளித்த பதிலைக் கண்டு, நீதிபதியே தலை சுற்றிப் போனார்.நந்த கிஷோர் சந்தக் கொலை செய்யப்பட்டதாக வழக்கு தொடரப்பட்ட நிலையில், அவர் தற்போது நீதிமன்றத்தில் இருப்பதாக கூறவே, திகைப்படைந்த நீதிபதி, அவரை காட்டுமாறு கூறினார்.

அப்போது ஆஜரான நந்த கிஷோர் சந்தக்கை பார்த்து, கொஞ்சம் முன்னால் வாருங்கள், கால்களை பார்த்துக் கொள்கிறேன் என நீதிபதி நகைச்சுவையாக கூற, நீதிமன்ற அறையே சிரிப்பலையில் மூழ்கியது.மேலும், கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் நபர் உயிருடன் இருக்கும் நிலையில் எப்படி கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டது என்றும் அவர் கேள்வி எழுப்பினார். இதையடுத்து, இது போன்ற செயல்கள் காவல்துறையை கேலிக்குள்ளாக்கும் என அதிருப்தி தெரிவித்த நீதிபதி, சம்பந்தப்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்தார். மேலும், இந்த வழக்கை விசாரித்த கீழமை நீதிமன்ற நீதிபதிகள், இயந்திரத்தனமாக செயல்பட்டுள்ளதாக கூறிய நீதிபதி, ராதேஷ் சியாம் சந்தேக் உள்ளிட்டோர் மீதான வழக்குகளை ரத்து செய்து உத்தரவிட்டார்.

X

Thanthi TV
www.thanthitv.com