நகை அபகரிப்பு விவகாரம்... +2 மாணவி தாயாருடன் தற்கொலை முயற்சி
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே, 60 சவரன் நகைகள் அபகரிப்பு விவகாரத்தில், பிளஸ்2 மாணவி, தனது தாயாருடன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
பொட்டல்விளை பகுதியை சேர்ந்த ஜெராக்ஸ் கடை உரிமையாளரின் 17 வயது மகள், பிளஸ்2 முடித்துவிட்டு மேற்படிப்பிற்காக காத்திருக்கிறார். இந்நிலையில், அவரது தாயார் வீட்டில் பீரோவில் வைத்திருந்த 60 சவரன் நகைகள் மாயமானது குறித்து மகளிடம் கேட்டபோது, இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய காதலன் ஆடம்பரமாக வாழ, வீட்டில் இருந்த நகைகளை தன்னுடன் +2 படித்துவந்த தோழியிடம் கொடுத்து அனுப்பியதாக கூறியுள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில் இந்திரா காலனி பகுதியில் உள்ள மாணவி வீட்டில் போலீசார் விசாரணை நடத்தி மாயமான நகைகளில் சிலவற்றை கைப்பற்றினர். மாணவி, தனது தாயுடன் சேர்ந்து சக தோழியிடம் இன்ஸ்டாகிராமில் ஆண் நண்பன் போல் பழகி 60 சவரன் நகைகளை அபகரித்ததாக கூறப்படும் நிலையில், போலீசார் விசாரணைக்கு வருமாறு கூறியுள்ளனர். இதனால் அச்சமடைந்த தாயும், மகளும் வீட்டில் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்று, பின்னர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இருவரிடம் விசாரணை நடத்திய பின்னரே நகைகள் குறித்தும், யார் யாருக்கு இதில் தொடர்பு? என்பது குறித்தும் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
