இந்தியாவின் கழுத்தை நெரிக்கும் ரிப்போர்ட் - தமிழகத்திக்கும் எதிர்பாராத அதிர்ச்சி | India
இந்தியாவில் நிலத்தடி நீர் மாசு அதிகரிப்பால் ஏற்படும் பாதிப்பு என்ன? என்பதை அலசுகிறது இந்த தொகுப்பு
தண்ணீர்... உலகில் அனைத்து உயிரினங்களின் வாழ்வாதாரத்திற்கு அடிப்படை அலகு.
அது சுத்தமாக கிடைக்கிறதா? பாதுகாப்பாக இருக்கிறதா? என்பதே இப்போதைய கேள்வி.
மாசுபட்டு கிடக்கும் நீர்நிலைகளை கண்ணால் பார்க்கும் நமது நம்பிக்கை, நிலத்தடி நீர்தான் சுத்தமானது என்பதாகும்.
ஆனால் அதுதான் இல்லை என்கிறது மத்திய நிலத்தடி நீர் வாரிய ஆய்வு முடிவுகள்.
2023-ல் நாட்டில் 15,000 இடங்களில் நிலத்தடிநீர் மாதிரி சேகரிக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டது.
அதில் நாட்டில் 56% மாவட்டங்களில் அதாவது 440 மாவட்டங்களில் நிலத்தடி நீரில் நைட்ரேட் அளவு அதிகமாக இருந்தது தெரியவந்துள்ளது.
நைட்ரேட் அளவு, பாதுகாப்பு அளவான லிட்டருக்கு 45 மில்லி கிராம் என்பதற்கு அதிகமாக இருந்தது தெரியவந்துள்ளது.
இது உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டிருக்கும் அளவைவிட அதிகம். இதுவே 2017 ஆம் ஆண்டில் 359 மாவட்டங்களில் பாதிப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.
குறிப்பாக ராஜஸ்தான், கர்நாடகா, தமிழ்நாடு, மகாராஷ்டிரா, தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம், மத்திய பிரதேச மாநிலங்களில் மாசுபாடு பரவலாக அதிகமாக இருந்தது.
தமிழ்நாட்டில் சேகரிக்கப்பட்ட மாதிரிகளில் 37.77 % மாதிரிகளில் வரம்புக்கு அதிகமாக நைட்ரேட் அளவு இருந்ததுள்ளது.
தமிழகத்தில் அதிகம் நைட்ரேட் பாதிப்பு கொண்ட மாவட்டமாக விழுப்புரம் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
சேலம், ஈரோடு, தர்மபுரி, கோவை, திருச்சி, வேலூர், மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் நிலத்தடிநீர் மாசு கண்டறியப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் நிலத்தடி நீரின் தரத்தை பாதிக்கும் மற்ற காரணிகளாக புளோரைடு, யுரேனியமும் இருக்கிறது.
இப்படி மாசு அதிகரிக்க அதிகப்படியாக நிலத்தடிநீர் எடுக்கப்படுதல், வேளாண்மைக்கு நைட்ரஜன் உரங்களை அதிகம் பயன்படுத்துவது, கால்நடை கழிவுகளை திறம்பட கையாளாமல் இருப்பது, நகரமயமாக்கல், மக்கள் தொகை அதிகரிப்பால் அதிகரிக்கும் கழிவுநீராலும் நைட்ரேட் அளவு அதிகரிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக பருவமழை முடிந்ததும் நிலத்தடிநீரில் நைட்ரேட் அளவு அதிகரிப்பதை காண முடிந்ததாக ஆய்வு தெரிவிக்கிறது.
நிலத்தடி நீரில் நைட்ரஜன் அளவு அதிகரிப்பது சுற்றுச்சூழல் மற்றும் உடல்நலத்துக்கு குறிப்பாக குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கிறார்கள்.
நைட்ரேட், யுரேனியம் கலந்துள்ள குடிநீரை தொடர்ச்சியாக குடிக்கும் போது சிறுநீரகப் பாதிப்பு ஏற்படக்கூடும் எனவும் தெரிவிக்கிறார்கள்
2030-க்குள் இந்தியாவில் 70% தண்ணீர் மாசடையும் என ஆய்வுகள் எச்சரிக்கும் வேளையில், நிலத்தடி நீர் மாசை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசாங்கங்கள் போர்க்கால நடவடிக்கையை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
