பிரசாதம் என சொல்லி பால்கோவாவை கொடுத்த பக்கத்து வீட்டு பெண்.. காத்திருந்த அதிர்ச்சி
சென்னை திருவல்லிக்கேணியில், கோயில் பிரசாதம் எனக் கூறி பால்கோவில் மயக்க மருந்து கொடுத்து, நகைகளை திருடிய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
திருவல்லிக்கேணி சின்னப்பா தெருவை சேர்ந்த மாலத்திரி என்பவரின் மனைவி சுஜாதாவுக்கு பழக்கமான பெண் ஒருவர், வீட்டிற்கு வந்து கோயில் பிரசாதம் என கூறி பால்கோவாவை கொடுத்துள்ளார். அதை சாப்பிட்ட சில நிமிடங்களில் சுஜாதா மயக்கம் அடைந்தார். அவருடைய கணவர் வீட்டுக்கு வந்து பார்த்தபோது, மனைவி அணிந்திருந்த நகைகள் காணாமல் போயிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்து, ஜாம் பஜார் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
மயக்கம் தெளிந்த பிறகு சுஜாதாவிடம் விசாரித்த போலீசார், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து திருவல்லிக்கேணி அரிசி மண்டி தெருவை சேர்ந்த ரவணம்மா என்ற பெண்ணை கைது செய்தனர்.
அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, அதே தெருவில் வசிக்கும் கொடியரசி என்பவர் வீட்டில் இருந்து 21 சவரன் நகைகளை திருடியது தெரிய வந்தது. ஆன்லைன் விளையாட்டில் லட்சக் கணக்கில் பணத்தை இழந்த ரவணம்மா , கடன் வாங்கியும், நகைகளை நூதன முறையில் திருடியும் சமாளித்து வந்துள்ளார். கைதான ரவணம்மாவிடம் 19 சவரன் நகைகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
