Idukku Pillaiyar Temple | TN, ஆந்திராவை பதறவைத்த மரணம் - தி.மலை கிரிவல பாதையில் அடியோடு மாற்றம்
TN, ஆந்திராவை பதறவைத்த மரணம் - தி.மலை கிரிவல பாதையில் அடியோடு மாற்றம்
இடுக்கு பிள்ளையார் கோவிலுக்குள் செல்ல வழிகாட்டு நெறிமுறைகள் திருவண்ணாமலை கிரிவல பாதையில் உள்ள இடுக்கு பிள்ளையார் கோயிலுக்குள் சிக்கி ஆந்திர பக்தர் உயிரிழந்த நிலையில், நேர கட்டுப்பாடு விதித்தும், பணியாளர்களை நியமித்தும் கோவில் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது... கடந்த 24ஆம் தேதி, ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியை சேர்ந்த 36 வயதான மணி குமார் என்ற பக்தர் தனது நண்பர்களுடன் திருவண்ணாமலைக்கு வந்து கிரிவலம் சென்றார்... கிரிவலப் பாதையில் அமைந்துள்ள இடுக்கு பிள்ளையார் கோயிலில் தரிசனம் மேற்கொள்ள வந்த அவர் குகைக்குள் நுழைந்த போது உடல் பருமன் காரணமாக இடுக்கில் சிக்கி மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கினார். உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போதும், வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் பெரும் சோகத்தையும் ஏற்படுத்திய நிலையில், இதுபோன்று பக்தர்கள் உள்ளே சென்று சிக்கித் தவிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்தது... எனவே பக்தர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய கோயில் நிர்வாகத்தின் சார்பில், தமிழ், ஆங்கிலம், தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில், இடுக்கு பிள்ளையார் ஆலயத்திற்குள் செல்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் கொண்ட விளம்பரப் பதாகை வைக்கப்பட்டுள்லது. அதில், பக்தர்கள் நலன் மற்றும் பாதுகாப்பு கருதி, குறுகிய நுழைவாயில் கொண்ட இடுக்கு பிள்ளையார் கோவிலுக்குள் உடல் பருமன் உள்ளவர்கள், உடல்நிலை பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் வயதானவர்கள் செல்ல அனுமதி இல்லை என அறிவுறுத்தப்பட்டுள்ளது.. மேலும் இடுக்கு பிள்ளையார் கோவிலில் பகல் மற்றும் இரவு நேரங்களில் சுழற்சி முறையில் 2 பணியாளர்களை கோவில் நிர்வாகம் நியமித்துள்ளது. இதுவரை இரவு முழுவதும் திறந்திருந்த இடுக்கு பிள்ளையார் கோயிலுக்கு, தற்போது நேர கட்டுப்பாடும் விதிக்கப்பட்டுள்ளது... அதன்படி, காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே கோவில் திறந்திருக்கும் என்றும், பௌர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்களில் வழக்கம்போல் இரவு நேரங்களிலும் கோவில் நடை திறந்திருக்கும் எனவும் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது
