Hospital | கர்ப்பிணி சாப்பிட்ட இட்லியில் பல்லி நடுங்கி போன உறவினர்..
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள தனியார் கேண்டினில் கர்ப்பிணிக்கு வாங்கிய இட்லி சாம்பாரில் பல்லி இறந்து கிடந்ததால் உறவினர்கள் அதிர்ச்சி
திருவாரூர் மாவட்டம் குடவாசல் ஒன்றியத்திற்குட்பட்ட வடுககுடி பகுதியைச் சேர்ந்தவர் ஜெயராமன்.இவர் விவசாயக் கூலி வேலை செய்து வருகிறார்.இவரது மகள் கௌசல்யா வயது 32. கௌசல்யா நிறைமாத கர்ப்பணியாக உள்ள நிலையில் கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.கௌசல்யாவுக்கு 7 வயதில் ஒரு மகன் உள்ள நிலையில் இரண்டாவது பிரசவத்திற்காக இங்கு அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இன்று காலை கௌசல்யாவிற்கு உணவு வாங்குவதற்காக அவரை தந்தை ஜெயராமன் திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் அலுவலகத்திற்கு எதிரில் உள்ள விவி ஆர் கேண்டின் எனப்படும் தனியார் உணவகத்தில் நான்கு இட்லி வாங்கி கொடுத்துள்ளார்.இதில் கௌசல்யா ஒரு இட்லியை சாப்பிட்ட நிலையில் இரண்டாவது இட்லியை சாப்பிடுவதற்காக சாம்பார் ஊற்றிய போது அதில் சிறிய பல்லி ஒன்று இறந்து கிடந்துள்ளது.இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கௌசல்யா இது குறித்து தனது தந்தையிடம் கூறி சம்பந்தப்பட்ட உணவகத்தில் இது குறித்து கேட்கும்படி கூறியுள்ளார்.
இதனையடுத்து அந்த இட்லியுடன்உணவைத்திற்கு வந்த ஜெயராமன் இது குறித்து கேண்டின் உரிமையாளரிடம் கேட்ட நிலையில் அவர் தெரியாமல் தவறுதலாக விழுந்திருக்கலாம் என்று கூறியதால் கோபம் அடைந்த ஜெயராமன் அங்கு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து ஜெயராமனுடன் சக நோயாளிகளின் உறவினர்களும் அங்கு கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதயைடுத்து காவல்துறையினர் அவர்களிடம் சமாதானமாக பேசி மருத்துவமனை நிலைய அலுவலரிடம் புகார் தெரிவிக்கலாம் என்று அழைத்து சென்றுள்ளனர்.குறிப்பாக இந்த தனியார் உணவகத்தில் வாங்கிய இட்லி சாம்பாரை மற்ற கர்ப்பிணிகள் நோயாளிகள் யாரும் சாப்பிட்டார்களா என்று தெரியாத நிலையில் இந்த சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து திருவாரூர் அரசு மருத்து கல்லூரி மருத்துவமனை முதல்வர் பொறுப்பு ராஜேந்திரனிடம் கேட்டபோது இது தனியார் உணவகம்.சம்பந்தப்பட்டவர்கள் மருத்துவமனை நிலைய அலுவலரிடம் புகார் அளித்துள்ளனர்.காவல்துறையினருக்கும் புகார் அளித்துள்ளனர்.நான் நேரடியாக கேண்டின் உரிமையாளரிடம் விசாரணை நடத்த உள்ளேன்.அந்த விசாரணைக்கு பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
