

பள்ளியில் 12ம் வகுப்பு படிக்கும் தன் மகள், 45 வயது நபருடன் ஓடிப் போய் விட்டதாகக் கூறி அப்பெண்ணின் தாய் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆள் கொணர்வு மனுவை தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிபதிகள், சமீப காலமாக மைனர் பெண்கள், வயதான மற்றும் திருமணமானவர்களுடன் ஓடிப் போவது அதிகரித்து வருவது குறித்து வேதனை தெரிவித்தனர்.
இதை கட்டுப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்திய நீதிபதிகள், இது போன்ற நிகழ்வுகளை தடுக்க அரசு எடுத்துள்ள நடவடிக்கை என்ன என்று கேள்வி எழுப்பினர். இந்த வழக்குகளை கையாள ஏன் தனிப்பிரிவை ஏற்படுத்தக் கூடாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். இந்த வழக்கில் சமூக நலத் துறை செயலாளரையும், டி.ஜி.பி.யையும் எதிர் மனுதாரர்களாக சேர்க்க உத்தரவிட்ட நீதிபதிகள் , கடந்த 10 ஆண்டுகளில் வீட்டை விட்டு ஓடிப்போன மைனர் பெண்கள் எத்தனை பேர், போக்சோ சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர் உள்ளிட்ட கேள்விகளை எழுப்பி நவம்பர் 8 ம் தேதி பதிலளிக்க உத்தரவிட்டனர்.