கொரோனா குறித்து சமூக வலை தளங்களில் வதந்தி - கோவையில் ஹீலர் பாஸ்கர் கைது

கொரோன குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பியதாக ஹீலர் பாஸ்கரை கோவையில் போலீசார் கைது செய்தனர்.
கொரோனா குறித்து சமூக வலை தளங்களில் வதந்தி - கோவையில் ஹீலர் பாஸ்கர் கைது
Published on

நோய் பாதிப்புகள் குறித்தும், அரசு அதிகாரிகள் பற்றியும் விமர்சனம் செய்யும் வகையிலான அந்த வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கரிடம் கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், ஹீலர் பாஸ்கர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார்.

இந்த சூழலில் ஹீலர் பாஸ்கர் மீது கோவை மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர் ரமேஷ், புகார் அளித்தார். கொரோனா குறித்து பொதுவெளியில் அவதூறு பரப்பும் ஹீலர் பாஸ்கர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்ததன் பேரில், கோவை குனியமுத்தூர் போலீசார் ஹீலர் பாஸ்கரை கைது செய்தனர்.

மக்களிடையே பீதியை கிளப்புதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், அரசு அதிகாரிகளை விமர்சித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்ட ஹீலர் பாஸ்கர், கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

கடந்த 2018ல் வீட்டிலேயே பிரசவம் பார்த்த ஒரு பெண் பலியான நிலையில் அது தொடர்பான பிரச்சினை விஸ்வரூபம் எடுத்தது. அந்த சமயத்தில் பெண்களுக்கு வீட்டிலேயே பிரசவம் செய்யும் முறையை ஊக்குவித்த ஹீலர் பாஸ்கர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

ஹீலர் பாஸ்கருக்கு எதிராக ஒரு குழு இருந்தாலும் கூட, ஆதரவாக பலரும் இருப்பதால் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் கருத்துகளை பதிவிட்டு வந்தார். தினம் தினம் பல்வேறு விஷயங்களை பற்றி பேசிவரும் அவர்,

இப்போது கொரோனா குறித்த அவதூறில் மீண்டும் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

X

Thanthi TV
www.thanthitv.com