

கடந்த 2017 ஆம் ஆண்டு சட்டமன்றத்திற்குள் குட்கா எடுத்து வந்ததாக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட 21 எம்எல்ஏக்கள் மீது உரிமை மீறல் நடவடிக்கை எடுக்கப்பட்டு, உரிமைக் குழு நோட்டீஸ் அனுப்பியது.
இதை எதிர்த்து ஸ்டாலின் உள்பட 21 எம்.எல்ஏக்களும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, தடை உத்தரவை பெற்றனர். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த இந்த வழக்கு, கடந்த 12 ஆம் தேதி இறுதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. தடை செய்யப்பட்ட குட்கா எளிதில் கிடைப்பதை அரசின் கவனத்திற்கு கொண்டு வரவே அதை சட்டமன்றத்திற்கு கொண்டு வந்ததாக திமுக தரப்பில் வாதிடப்பட்டது. மேலும், அரசு பெரும்பான்மையை இழந்து விட்டதால் திமுக உறுப்பினர்களுக்கு எதிராக உரிமை மீறல் பிரச்சினை எடுக்கப்பட்டதாகவும் வாதிடப்பட்டது. ஆனால், சபையின் மாண்பை அவமதிக்கும் வகையில் குட்கா கொண்டு வந்ததால் தான் உரிமை மீறல் பிரச்னை எடுக்கப்பட்டதாக சட்டசபை செயலாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததையடுத்து, தீர்ப்பு
தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் நாளை தீர்ப்பளிக்கப்படுகிறது.