கோகுல்ராஜ் ஆணவக்கொ*ல வழக்கு... கோர்ட் முக்கிய உத்தரவு
சேலம் பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் ஆணவக் கொலை வழக்கில், அரசு சிறப்பு வழக்கறிஞராக பணியாற்றிய மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகனுக்கு வழங்க வேண்டிய கட்டணத்தை மூன்று வாரங்களில் வழங்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு கோகுல்ராஜ் ஆணவக் கொலை வழக்கில், மதுரை நீதிமன்றத்தில் சிறப்பு அரசு வழக்கறிஞராக பணியாற்றிய மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகன், அதற்கான கட்டணம் இதுவரை வழங்கப்படவில்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, இதுகுறித்து பரிசீலித்து நீதிமன்றம் நிர்ணயிக்கும் காலக்கெடுவுக்குள் கட்டணம் வழங்கப்படும் என அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்த நீதிபதி, மூன்று வாரங்களில் அவருக்கான கட்டணத்தை வழங்க உத்தரவிட்டார். கட்டணம் வழங்கியது குறித்து வரும் 30-ம் தேதி அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டார்.
