ஏழை மாணவர்களுக்கு இலவச முடி திருத்தம் - சவரத் தொழிலாளியின் உன்னதமான சேவை
பேர்ணாம்பட்டு நகரில் முடி திருத்தும் கடை நடத்தி வருகிறார் பாண்டியன். தனது தொழிலில் கிடைக்கும் வருவாயை வைத்து, இரு குழந்தைகளை படிக்க வைத்து வரும் அவர், ஏழை மாணவர்களுக்கு ஏதேனும் சேவை செய்ய வேண்டும் என மிகுந்த ஆர்வம் கொண்டார். அதன் ஒரு பகுதியாக ஒவ்வொரு கிராமத்திற்கு சென்று, அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களை சந்தித்து அனுமதி பெற்று, ஏழை மாணவர்களுக்கு இலவசமாக முடி திருத்தம் செய்து வருகிறார்.
இலவச சேவையை ஏனோதானோ என்று செய்யாமல், ஒவ்வொரு குழந்தைகளுக்கும் தனி தனி பிளேடு, கிருமி நாசினி மூலம் சீப்பு, கத்திரிகோலை சுத்தம் செய்து முடி திருத்தம் செய்கிறார். இவரது சேவையை பாராட்டி, பத்தலப்பல்லி அரசு பள்ளி சார்பில் வழங்கப்பட்ட பரிசுத்தொகையை கூட வாங்க மறுத்துள்ளார் தொழிலாளி பாண்டியன்.
ஓலை குடிசையில் கஷ்டமான சூழலில் வாழும் சவரத் தொழிலாளி பாண்டியனின் பரந்துப்பட்ட மனப்பான்மையை சிந்திக்கும் போதே ஒரு உத்வேகம் பிறக்கிறது. பாண்டியனின் இந்த சேவையை, பேர்ணாம்பட்டு மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
