

சிவகங்கை மாவட்டம், டி.அதிகரையை சேர்ந்த சுப்ரமணியன் என்பவர், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில்,"கிராமப்புறங்களில் வறுமை கோட்டிற்கு கீழ் வசிக்கும் குடும்பங்களுக்கு இலவசமாக ஆடு வழங்கும் திட்டம் தமிழக அரசால் கடந்த 2011ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இதில் 30 சதவீதம் பயனாளிகள் தாழ்த்தப்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்று விதி உள்ள நிலையில் , கழுகர்கடை ஊராட்சியில் அதிமுகவினர் அரசு அதிகாரிகள் துணையுடன் பயனாளிகளை சேர்ப்பதாகவும் கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு, நடப்பாண்டு கழுகர்கடை ஊராட்சியில் இலவச ஆட்டுக்கான பயனாளிகள் பட்டியலை தாக்கல் செய்ய சிவகங்கை மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டனர்.