போலீசார் அடித்து துன்புறுத்தியதாக மீனவர் பகீர் புகார்
விசாரணை என்ற பெயரில் மீனவரை போலீசார் தாக்கியதாக புகார்
சென்னை காசிமேட்டில் மீனவர் காணாமல் போனதாக அளித்த புகாரில், விசாரணை என்ற பெயரில் மற்றொரு மீனவரை போலீசார் அடித்து துன்புறுத்தியதாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
காசிமேடு இந்திரா நகர் பகுதியை சேர்ந்த முத்து என்பவர், கடந்த 12ம் தேதி சீனி என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் 13 பேருடன் ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க சென்றுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை கரை திரும்பிய 13 பேரில், பிரபு என்பவர் மாயமானதாக, காசிமேடு மீன்பிடி துறைமுகம் காவல் நிலையத்தில் அவரது குடும்பத்தினர் புகார் அளித்தனர். இதன்பேரில் முத்துவை அழைத்துச் சென்று போலீசார் விசாரித்தனர்.
இதனிடையே, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் இருப்பதாக குடும்பத்தினரிடம் பிரபு தொலைபேசி வாயிலாக கூறியதால், முத்துவை போலீசார் அனுப்பி வைத்தனர். இந்நிலையில், விசாரணை என்ற பெயரில் போலீசார் தன்னை தாக்கி துன்புறுத்தியதாக முத்து தெரிவித்தார்.
போலீசார் முறையாக விசாரிக்காமல் முத்துவை அடித்து துன்புறுத்தியதாகக்கூறி, அவரது உறவினர்கள் காவல் நிலையம் முன்பு கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
