3 பெண் குழந்தைகளை கொன்று தந்தையும் தற்கொலை...

3 பெண் குழந்தைகளை கொன்று தந்தையும் தற்கொலை...
Published on

இன்னும் சில ஆண்டுகளில் ஊர் அறிய சீர் கொண்டு வந்து மூன்று பெண் குழந்தைகளையும் வாழ்த்த வேண்டுமென நினைத்த சொந்த பந்தம் அனைவரையும் தற்போது காலம் வாய்க்கரிசி போட அழைத்திருக்கிறது. பெற்று வளர்த்த மூன்று பெண் குழந்தைகளையும் கழுத்தறுத்து கொலை செய்துவிட்டு, தகப்பனும் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். நடந்த கோரச் சம்பவத்தின் அதிர்ச்சியிலிருந்து காவல்துறை அதிகாரிகளால் கூட மீள முடியவில்லை. புதிதாக கட்டப்பட்டிருந்த அந்த வீட்டில் டைல்ஸ் தரை முழுவதும் ரத்தம் வழிந்தோடியது. நடுநிசி இரவில் மூன்று பெண் குழந்தைகளின் கழுத்தையும் கரகரவென அறுத்த அந்த கொலைக்கார தகப்பனின் பெயர் கோவிந்தராஜ்.

நாமக்கல் மாவட்டம் மங்களபுரம் அருகேயுள்ள வேப்பங்கவுண்டன்புதூர் பகுதியை சேர்ந்தவர். 10 வருடங்களுக்கு முன்பு கோவிந்தராஜ் பாரதி என்பவரை திருமணம் செய்து கொண்டிருக்கிறார். இந்த தம்பதிக்கு மூன்று பெண் பிள்ளைகளும், ஒரு வயதில் ஆண் குழந்தையும் இருந்துள்ளனர். பெங்களூரிலுள்ள RIG நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த கோவிந்தராஜ் சொந்த ஊரில் வீடு கட்ட வேண்டுமென ஆசைப்பட்டிருக்கிறார். ஆனால், பூமி பூஜை போட்டு அஸ்திவாரம் எடுத்தப்போது கோவிந்தராஜின் முகத்திலிருந்த மகிழ்ச்சி அவர் பால் காய்ச்சி அந்த வீட்டிற்குள் சென்ற போது புதைந்து போயிருக்கிறது.

அதற்கான காரணம் கடன், எப்படியாவது வீட்டை நல்ல முறையில் கட்டிவிட வேண்டுமென்கிற ஆசையில் கோவிந்தராஜ் கிட்டதட்ட 20 லட்ச ரூபாய் வரை கடன் வாங்கியதாக தெரிகிறது. ஒருக்கட்டத்தில் தன்னுடைய வருமானத்தில் அந்த கடனை அடைக்க முடியாமல் அவர் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்து வந்ததாகவும், இதனால் கடந்த சில மாதங்களாகவே கோவிந்தராஜும், பாரதியும் அடிக்கடி சண்டையிட்டு வந்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்த சூழலில் தான் சம்பவம் நடந்தன்று மகனும், மனைவியும் படுக்கையறையிலும், மூன்று பெண் பிள்ளைகள் கோவிந்தராஜோடு ஹாலிலும் உறங்கியுள்ளனர்.

ஒருபுறம் கடன் நெருக்கடி. மற்றொரு புறம் பெண் பிள்ளைகளை எப்படி கரை சேர்ப்பது என்கிற அச்சத்திலிருந்த கோவிந்தராஜின் கண்கள் தூக்கமின்றி சிவந்திருக்கிறது. மிகுந்த மன அழுத்ததிலிருந்தவர் அந்த விபரீத முடிவை கையில் எடுத்துள்ளார். வீட்டிலிருந்து கத்தியால் தூங்கி கொண்டிருந்த மூன்று பிள்ளைகளின் கழுத்தையும் கரகரவென அறுத்துள்ளார். பிள்ளைகளின் மரண ஓலம் கேட்டு படுக்கறையில் இருந்து பதறியடித்து ஓடி வந்த பாரதி அதிர்ச்சியில் உதவிக்கேட்டு அக்கம்பக்கத்தினரை கத்திகூச்சலிட்டு அழைத்துள்ளார். அதற்குள் கோவிந்தராஜும் ஏற்கனவே தயாராக வைத்திருந்த பூச்சிகொல்லி மருந்தை குடித்து உயிரை மாய்த்துக்கொண்டிருக்கிறார். மூன்று பிள்ளைகளை கொலை செய்துவிட்டு தந்தையும் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சம்பவ இடத்திலிருந்து உடலை மீட்ட காவல்துறையினர் அதனை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும், கோவிந்தராஜ் எடுத்த விபரீத முடிவிற்கு கடன் நெருக்கடி மட்டும் தான் காரணமா ? அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா ? என்கிற கோணத்திலும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com