Chennai | `காது ஓட்டை சரி செய்யும் அறுவை சிகிச்சை' - பிரபல டாக்டர் அதிரடி கைது.. பகீர் பின்னணி
அங்கீகாரம் இல்லாமல் “Ear Hole Repair“ எனப்படும் காது ஓட்டை சரி செய்யும் அறுவை சிகிச்சை செய்ததாக, மும்பையை சேர்ந்த மருத்துவர் பூனம் சர்மா சென்னையில் போலீசாரால் கைது செய்யப்பட்டார். ஹோமியோபதி மருத்துவரான பூனம் சர்மா, காது ஓட்டை சரி செய்யும் சிகிச்சை முறையைப் பற்றி, இன்ஸ்டாவில் 800-க்கும் மேற்பட்ட வீடியோக்களை வெளியிட்டு பிரபலமானவர். நாடு முழுவதும் 15-க்கும் மேற்பட்ட நகரங்களில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு, காது ஓட்டை சிகிச்சை அளித்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் ஹோமியோபதி மருத்துவராக இருந்தும் விதிகளை மீறி அறுவை சிகிச்சை மேற்கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து சென்னை மற்றும் கோயம்புத்தூரில் சிகிச்சை முகாம் நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் போலீசார் சோதனை நடத்தி பூனம் சர்மாவை கைது செய்தனர். முதல்கட்ட விசாரணையில் வாட்ஸ்அப் மூலம் முன்பதிவு கட்டணமாக 2 ஆயிரம் ரூபாய் வசூலித்ததும் தெரியவந்துள்ளது. இதையடுத்து பூனம் சர்மா மற்றும் அவரது உதவியாளரையும் போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
