கோபத்தில் அண்ணனை கட்டையால் அடித்த தம்பி - தம்பியை குத்திக் கொன்ற அண்ணன்

ஈரோடு அருகே தம்பியை அண்ணனே கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கோபத்தில் அண்ணனை கட்டையால் அடித்த தம்பி - தம்பியை குத்திக் கொன்ற அண்ணன்
Published on

ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம் அருகே உள்ள கமலா நகரை சேர்ந்தவர் மனோகர். இவருக்கு சங்கர் மற்றும் தினேஷ் என இரண்டு மகன்கள். இருவரும் கூலித் தொழிலாளர்கள். இதில் சங்கருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ள நிலையில் அனைவரும் கூட்டு குடும்பமாக வாழ்ந்து வந்துள்ளனர். குடிபோதைக்கு அடிமையான சங்கர், தினமும் போதையில் வந்து குடும்பத்தில் தகராறில் ஈடுபடுவதை வழக்கமாக வைத்துள்ளார். சம்பவத்தன்று குடிபோதையில் வந்த மூத்த மகன் சங்கர், தன் மனைவி மற்றும் தந்தையிடம் பணம் கேட்டுள்ளார். அப்போது வாக்குவாதம் முற்றவே, தன் தந்தை மனோகரை சங்கர் அடித்துள்ளார். இதைப் பார்த்து ஆத்திரமடைந்த இளைய மகன் தினேஷ், கட்டையை எடுத்து தன் அண்ணனை அடித்தார்.

இதில் படுகாயமடைந்த சங்கர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தம்பி தன்னை அடித்ததால் ஆத்திரத்தில் இருந்த சங்கர், தன் கோபத்தை எல்லாம் உள்ளுக்குள் வைத்துக் கொண்டு சிகிச்சையில் இருந்துள்ளார். உடல்நலம் தேறிய பின் வீட்டுக்கு வந்த அவர், நேராக தம்பி தினேஷை தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஆத்திரம் தீர குத்தினார். இதில் படுகாயமடைந்த தினேஷ், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மகன் உயிரிழந்ததை பார்த்த பெற்றோர் கதறி துடித்தனர். இவர்களின் அலறல் சப்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வரவே, மூத்த மகன் சங்கர் தப்பிச் செல்ல முயன்றார். ஆனால் அவர்கள் உடனே சங்கரை வளைத்து பிடித்து கட்டி வைத்தனர். பின்னர் கொலையாளி போலீஸ் வசம் ஒப்படைக்கப்பட்டதை தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. தன் தம்பியை அண்ணனே கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது...

X

Thanthi TV
www.thanthitv.com