புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் இருந்து வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நவீன ரக அறுவை சிகிச்சை கருவி, போராட்டத்திற்கு பின்னர் மீண்டும் அங்கேயே வைக்கப்பட்டது. 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நவீன ரக எலும்பு முறிவு அறுவை சிகிச்சை கருவியை விராலிமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, சாதாரண கருவியை அறந்தாங்கி மருத்துவமனையில் வைத்ததாக கூறப்படுகிறது. இது பற்றி தகவல் அறிந்த அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் ரத்தினசபாபதி சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் போராட்டத்தில் ஈடுபட்டார். பொதுமக்களின் கடும் எதிர்ப்பால், மீண்டும் அந்த கருவி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது.