

#Advertorial இந்தியாவின் எலக்ட்ரிக் வாகனப் பயணத்தின் மையப்புள்ளியாகத் தமிழ்நாடு தன்னை அமைதியாக நிலைநிறுத்திக் கொண்டுள்ளது. ஆரம்பக்கட்ட உத்வேகத்தை உருவாக்க ஊக்கத்தொகைகள் உதவினாலும், இப்போது மக்கள் எலக்ட்ரிக் வாகனங்களை நாடுவதற்கு ஊக்கத்தொகைகள் மட்டுமே காரணமில்லை. மாநிலத்தின் வலுவான வாகன உற்பத்தித் தளம், வளர்ந்து வரும் சார்ஜிங் கட்டமைப்பு, குறிப்பிட்ட தூரம் மட்டுமே தினந்தோறும் பயணிக்கும் நகர்ப்புறப் பயண முறை... எல்லாவற்றுக்கும் மேலாக நுகர்வோர் மத்தியில் அதிகரித்து வரும் நம்பிக்கை ஆகியவையே இந்த மாற்றத்திற்கு காரணங்களாகின்றன.
இன்று, கார் வாங்க விரும்பும் அனைவரும் ப்ராக்டிகலான கேள்விகளை எழுப்புகின்றனர்:
1. இந்தக் கார்கள் எங்கு தயாரிக்கப்படுகின்றன?
2. இவற்றை இயக்குவதற்கான மாதாந்திரச் செலவு எவ்வளவு?
3. எனது பணிக்குச் செல்லும் இடத்திற்கு அருகில் சார்ஜிங் நிலையம் உள்ளதா?
4. வீட்டில் சார்ஜர் அமைப்பதற்கு எனது அடுக்குமாடி குடியிருப்புச் சங்கம் அனுமதி அளிக்குமா?
5. சில ஆண்டுகளுக்குப் பிறகு பேட்டரியை மாற்றுவதற்கு எவ்வளவு செலவாகும்?
6. எலக்ட்ரிக் காரின் மறுவிற்பனை மதிப்பு என்னவாக இருக்கும்?
7. எல்லாவற்றிற்கும் மேலாக, ஒரு எலக்ட்ரிக் வாகனத்தை (EV) வைத்திருப்பது எனது அன்றாட வாழ்க்கை முறைக்கு இயல்பாகப் பொருந்துமா?
இக்கேள்விகள் எல்லாம் மின்சார வாகனங்களுக்கான மார்க்கெட் முதிர்ச்சியடைந்து வருவதையே பிரதிபலிக்கின்றன.
இந்தியாவின் மின்வாகன (EV) வளர்ச்சியில் தமிழ்நாடு ஏன் மையமாகத் திகழ்கிறது?
இந்தியாவின் வாகனத் தொழில்துறையில் தமிழ்நாட்டின் முக்கியத்துவம் இன்று நேற்று உருவானதல்ல. பல ஆண்டுகளாகவே கார்கள் மற்றும் வணிக வாகனங்கள் முதல் என்ஜின்கள், டிரான்ஸ்மிஷன்கள் மற்றும் வாகன உதிரிபாகங்கள் வரை அனைத்தையும் உற்பத்தி செய்து, நாட்டின் மிகப்பெரிய வாகன உற்பத்தி மையங்களில் ஒன்றாகத் தமிழ்நாடு திகழ்கிறது. நாட்டின் மொத்த வாகன ஏற்றுமதியில் 45 சதவீதமும், வாகன உதிரிபாக உற்பத்தியில் சுமார் 42 சதவீதமும் தமிழகத்தில்தான் நடக்கிறது.
பெரும்பாலான மாநிலங்கள் எலக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்வது அல்லது உற்பத்தி செய்வது என ஏதேனும் ஒன்றை மட்டுமே செய்கின்றன; ஆனால் தமிழ்நாடு இவை இரண்டையுமே பெருமளவில் மேற்கொண்டு வருகிறது - இதுவே மிக முக்கியமான அம்சமாகும். தமிழ்நாட்டின் எலக்ட்ரிக் வாகனக் கொள்கையானது, 2027-ஆம் ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதி வரை எலக்ட்ரிக் வாகனங்களுக்கு 100% சாலை வரி விலக்கு தருகிறது. வாகனப் பதிவுக் கட்டணமும் முழுமையாக ரத்து என்ற சலுகையையும் வழங்குகிறது.
இன்று, மின் வாகனங்கள் மட்டுமல்லாமல், பேட்டரி உற்பத்தி, மின்னணு பொருட்கள், பவர்டிரெய்ன் (powertrain) உதிரிபாகங்கள் மற்றும் மின்னேற்றக் கருவிகள் (charging equipment) ஆகியவற்றிலும் – தமிழ்நாடு முதலீடுகளை ஈர்த்து வருகிறது. உற்பத்தி மற்றும் ஆராய்ச்சியில் மேற்கொள்ளப்படும் முதலீடுகளின் வாயிலாக இந்தியாவின் மின்வாகன உற்பத்தி மற்றும் ஏற்றுமதி துறையில் மேலும் மேலும் முன்னணி வகிக்க நம் மாநிலம் இலக்கு கொண்டுள்ளது.
பல ஆண்டுகளாக வாகனத் துறையில் நிபுணத்துவத்தை வளர்த்து வருவதால் தமிழ்நாடு ஏற்கனவே பயனடைந்து வருகிறது. இங்கே ஏற்கனவே நன்கு கட்டமைக்கப்பட்ட விற்பனைச் சங்கிலிகள், சர்வீஸ் வலையமைப்புகள் மற்றும் பயிற்சி பெற்ற தொழில்நுட்ப வல்லுநர்களைக் கொண்டிருப்பதால், நுகர்வோரும் புதிய தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்வதில் தயக்கத்தை விட்டு இயல்பாகவே நம்பிக்கை கொள்கிறார்கள்.
உற்பத்தியில் வலிமை இருப்பதால் நுகர்வோருக்கு நம்பிக்கை
எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு, ஆரம்பகாலப் பயனாளர்களைத் தாண்டி விரிவடைவதால், வாங்குபவர்கள் வாகன விவரக்குறிப்புகளுடன் சேர்த்து நிறைய விஷயங்களை கேட்கிறார்கள். தொடர்ச்சியான சேவை, உதிரி பாகங்கள் தடையின்றி கிடைப்பது, நீடித்து உழைப்பதற்கான நம்பிக்கை போன்றவற்றையும் அதிகளவில் சீர்தூக்கிப் பார்க்கின்றனர். தமிழ்நாட்டின் அமைக்கப்பட்ட மின்வாகனக் நன்கு கட்டமைப்பு, இந்தக் கவலைகளில் பலவற்றைத் தீர்க்க உதவுகிறது.
தமிழகத்தின் வலுவான மின் வாகன உற்பத்தி கட்டமைப்பு, உதிரிபாகங்களுக்கான விநியோகச் சங்கிலிகளையும் உருவாக்குகிறது. இதனால், இறக்குமதியையே அதிகம் சார்ந்திருக்கும் மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், இங்கு பாகங்களின் எளிதாகவே கிடைக்கின்றன. இதனால், மின்வாகனம் வாங்குபவர்களுக்கு ஒரு நம்பிக்கை கிடைக்கிறது. நன்கு நிறுவப்பட்ட உதிரி பாக நெட்வொர்க் தங்கள் வாகனத்திற்கு கிடைக்கும் என்ற உறுதியான நம்பிக்கை அது.
"மைலேஜ் எவ்வளவு?" என்ற கணக்கே மாறிப் போச்சு
பல நகர்ப்புறக் குடும்பங்களுக்கு, கடந்த சில ஆண்டுகளில் தினசரி வாகனம் ஓட்டுவதன் செலவுக் கணக்கு கணிசமாக மாறியுள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகமாக இருப்பதால், அடிக்கடி பயணம் செய்பவர்கள் ஒரு வாகனத்தின் விலையைத் தாண்டி, அதன் மொத்த பராமரிப்புச் செலவில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளனர்.
இங்குதான் எலக்ட்ரிக் வாகனங்கள் ஒரு முக்கியமான ஆப்ஷனாக அமைகின்றன. ஒரு எலக்ட்ரிக் வாகனத்தை வீட்டில் முழுமையாக சார்ஜ் செய்ய பொதுவாக ₹250 முதல் ₹400 வரை செலவாகும். அந்த சார்ஜில் அந்த வாகனம் எவ்வளவு தூரம் செல்லுமோ அதே தூரத்திற்கு ஒரு பெட்ரோல்/டீசல் காருக்கு எரிபொருள் நிரப்புவது நிச்சயம் அதிக செலவுதான். ஒரு யூனிட் மின்சாரத்தின் விலை மாநிலத்திற்கு மாநிலம் மாறுபட்டாலும், எலக்ட்ரிக் வாகனத்துக்கு ஒரு கிலோமீட்டருக்கான செலவு தோராயமாக ₹1 முதல் ₹1.5 வரை ஆகும். இது பொதுவாக ஒரு பெட்ரோல் அல்லது டீசல் வாகனத்தின் எரிபொருள் செலவை விட மிகக் குறைவு.
எலக்ட்ரிக் வாகனங்களில் இயந்திர பாகங்கள் குறைவாக உள்ளன, என்ஜின் ஆயில் மாற்றத் தேவையில்லை, மேலும் மீளுருவாக்க பிரேக்கிங் (regenerative braking) காரணமாக பாரம்பரிய பிரேக்கிங் அமைப்புகளை விட தேய்மானம் குறைவாக உள்ளது. இது வழக்கமான பராமரிப்புச் செலவுகளையும் மிச்சப்படுத்துகிறது.
அதற்காக, எலக்ட்ரிக் வாகனங்களுக்கு பராமரிப்பே தேவையில்லை என்று அர்த்தமல்ல. டயர்கள், சஸ்பென்ஷன்கள், கேபின் ஃபில்டர்கள் மற்றும் பிரேக்கிங் பாகங்களுக்கு பராமரிப்பு தேவைதான். இருப்பினும், பராமரிப்பு முறை வேறுபட்டது. நீண்ட காலத்துக்கு கணக்கிட்டால் பல உரிமையாளர்களுக்கு இது மெயின்டெயினன்ஸ் செலவுகளை வெகுவாகக் குறைக்கிறது.
ஆனால், எரிபொருள் மற்றும் பராமரிப்புச் செலவுகள் என்பவை மொத்தச் செலவுப் பட்டியலில் ஒரு பகுதி மட்டுமே. வாகனம் வாங்குபவர்கள் அதன் விலையை மட்டும் கருத்தில் கொள்ளாமல், வாகனத்தை வைத்திருப்பதற்கான மொத்த செலவில் அதிக கவனம் செலுத்துவதால், சார்ஜிங் செலவுகள், பராமரிப்புச் செலவுகள் மற்றும் பொருத்தமான கார் இன்சூரன்ஸ் வகையை கொண்டிருத்தல் போன்றவை வாகனம் வாங்குதலின் முக்கிய அங்கங்களாக மாறி வருகின்றன. வாங்குபவர்கள் விலையில் மட்டும் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, அடுத்த ஐந்து முதல் எட்டு ஆண்டுகளுக்கான உரிமைச் செலவுகளை அதிகளவில் கணக்கிடுகின்றனர்.
சென்னை மக்களின் பயணத்துக்கு கச்சிதமாய் பொருந்தும் மின் வாகனங்கள்
ஒவ்வொரு நகரத்திற்கும் அதற்கே உரிய பயண இயல்பு உண்டு. அப்படிப் பார்த்தால் எலக்ட்ரிக் வாகனங்களுக்காகவே அப்படியே அளவெடுத்து செய்தது போல சென்னை வளர்ந்துள்ளது. ஆயிரக்கணக்கான கார் உரிமையாளர்கள் தினம்தோறும் குடியிருப்புப் பகுதிகளில் இருந்து OMR, கிண்டி, தரமணி போன்ற வணிகப் பகுதிகளுக்கு பயணிக்கின்றனர். இந்தப் பயணங்கள் பெரும்பாலும் ஒரே பாதையில் ஒரே மாதியாக அமையும். அலுவலகம் சென்று திரும்புதல், பள்ளிக்குக் குழந்தைகளைக் கொண்டு செல்லுதல், வார இறுதிப் பயணம்... இப்படி. ஆக, பல எலக்ட்ரிக் வாகன உரிமையாளர்களுக்கு, நம் வாகனம் தினம் எவ்வளவு தூரம் பயணிக்கும் என்பது தெரிந்துவிடுகிறது.
தினமும் 40 முதல் 60 கிலோமீட்டர் வரை வாகனம் ஓட்டும் ஒரு பயணி, இரவில் வீட்டில் எளிதாக சார்ஜ் செய்து, ஒவ்வொரு காலையிலும் முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட பேட்டரியோடு வாகனத்தை எடுக்க முடியும். இத்தகைய சூழ்நிலைகளில், பொது இடங்களில் சார்ஜ் செய்வது என்பது அன்றாடத் தேவையாக இல்லாமல், எப்போதாவது ஒருமுறை நிகழும் அரிதான விஷயமாக மாறுகிறது.
பெட்ரோல் மற்றும் டீசல் கார்களில் ஒரு குறைபாடாகப் பார்க்கப்படும் விஷயமே எலக்ட்ரிக் வாகனங்களுக்கு அட்வான்டேஜாக அமைந்துவிடுகிறது. நெரிசலான போக்குவரத்தின் போது பொதுவாக பெட்ரோல் டீசல் கார்கள் அதிக எரிபொருளை இழக்க வேண்டிவரும். ஆனால், எலக்ட்ரிக் வாகனங்கள் அப்படி இழக்கும் ஆற்றலை regenerative braking மூலம் மீட்டெடுக்கிறது. அந்த வகையில் பல சென்னைவாசிகள் அடிக்கடி பிரேக் பிடித்து வண்டி ஓட்டும் டிரைவிங் முறை வழக்கமான வாகனங்களை விட எலக்ட்ரிக் வாகனங்களுக்கு கச்சிதமாக பொருந்திவிடுகிறது.
கடந்த சில ஆண்டுகளில் ஏற்பட்ட மிகவும் குறிப்பிடத்தக்க மாற்றங்களில் ஒன்று, தமிழ்நாடு முழுவதும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் உள்கட்டமைப்பு சீராக விரிவடைந்து வருவதுதான்.
வணிக வளாகங்கள், ஹோட்டல்கள், அலுவலக வளாகங்கள், எரிபொருள் நிலையங்கள் மற்றும் நெடுஞ்சாலை ஓய்வு நிறுத்தங்களில் பொது சார்ஜிங் மையங்கள் அதிகளவில் காணப்படுகின்றன. அரசாங்கம், தனியார் சார்ஜிங் நிறுவனங்கள் மற்றும் வாகன உற்பத்தியாளர்கள் என அனைவரும் இந்த வளர்ச்சிக்கு பங்களித்துள்ளனர்.
இருப்பினும், சார்ஜிங் நிலையங்கள் எல்லா இடத்திலும் ஒரே மாதிரியாக கிடைப்பதில்லை. சிறிய நகரங்கள், நெடுஞ்சாலைகளின் நடுப்பகுதிகள் அல்லது கிராமப்புற மாவட்டங்களில் சார்ஜிங் நிலையங்களை கண்டுபிடிப்பதை விட, மத்திய சென்னையில் ஒன்றைக் கண்டுபிடிப்பது எளிதாக உள்ளது.
அடுக்குமாடிக் குடியிருப்புச் சூழல் மற்றொரு சவாலாக உள்ளது. வருங்கால EV உரிமையாளர்கள் பலர் இந்தக் கட்டடங்களில் வசிக்கின்றனர். இங்கு, தனிப்பட்ட சார்ஜிங் பாயின்ட் வைப்பதற்கும், பிரத்யேக வாகன நிறுத்துமிடங்களைப் பெறுவதற்கும் குடியிருப்பு சங்கங்களிடமிருந்து அனுமதி தேவைப்படுகிறது. இதெல்லாம் EV வாங்க நினைப்பவர்களிடையே அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதன் விளைவாக, பலரும் எந்த வாகனத்தை வாங்கலாம் என முடிவு செய்வதற்கு முன்பே, சார்ஜிங் வசதியை மதிப்பிடுகின்றனர்.
சார்ஜிங் உள்கட்டமைப்பை மட்டும் விரிவுபடுத்துவது போதுமானதாக இருக்காது என்கிறார்கள் தொழில்துறை ஆய்வாளர்கள். வீட்டிலேயே மின்னேற்றுவதை எளிதாக்குவது – குறிப்பாக அடுக்குமாடிக் குடியிருப்புகளில் – சார்ஜர்களை பயன்படுத்துவதை எளிதாக்குவது இன்னும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.
பேட்டரி வாரன்ட்டியும் பழைய எலக்ட்ரிக் வாகன விற்பனையும் - மக்கள் இதைத்தான் கேக்குறாங்க
எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு அதிகரிக்கும் போது, நுகர்வோரின் கவலைகள் சார்ஜிங் உள்கட்டமைப்பிலிருந்து பேட்டரியின் ஆயுட்காலம், வாரன்ட்டி மற்றும் மறுவிற்பனை மதிப்பு ஆகியவற்றை நோக்கி திரும்புகிறது. இப்போதெல்லாம் ஒரு சார்ஜில் வாகனம் எவ்வளவு தூரம் போகும்? சார்ஜின் வசதி என்ன எனக் கேட்பது போலவே பொதுமக்கள் இவற்றையும் கேட்கிறார்கள். "வாகனத்தை வாங்கலாம்" என அவர்கள் முடிவெடுக்க இதெல்லாம் முக்கிய பங்காற்றுகிறது.
நவீன எலக்ட்ரிக் வாகன பேட்டரிகள், பல நுகர்வோர் ஆரம்பத்தில் எதிர்பார்த்ததை விட மிகவும் நீடித்து உழைக்கக்கூடியவை. பெரும்பாலான உற்பத்தியாளர்கள் இப்போது எட்டு ஆண்டுகள் அல்லது சுமார் 1,60,000 கிலோமீட்டர் வரை நீடிக்கும் பேட்டரி உத்தரவாதங்களை வழங்குகிறார்கள். இது நிச்சயமாக வாங்குபவரின் நம்பிக்கையை கணிசமாக மேம்படுத்தியுள்ளது.
ஆனால், இப்போதுவரை ஒரு எலக்ட்ரிக் வாகனத்தின் மறுவிற்பனை மதிப்பு ஒரு விவாதப் பொருளாகவே உள்ளது. பெட்ரோல் வாகனங்களைப் போலல்லாமல், இந்தியாவின் பயன்படுத்தப்பட்ட எலக்ட்ரிக் வாகனச் சந்தை என்பது ரொம்பவே புதுசு. முன்பே பயன்படுத்தப்பட்ட ஒரு எலக்ட்ரிக் வாகனத்தை வாங்குவதற்கு முன்பு, பேட்டரியின் நிலை, மீதமுள்ள உத்தரவாதக் காலம் மற்றும் மென்பொருள் ஆதரவு போன்றவற்றை மக்கள் மதிப்பீடு செய்கிறார்கள்.
பேட்டரிமாற்றுவதுஎளிதாவதாலும், சான்றளிக்கப்பட்டபழையஎலக்ட்ரிக்வாகனவிற்பனைதிட்டங்கள்அதிகமாவதாலும்மறுவிற்பனைமீதானநம்பிக்கைமேலும்மேம்படவாய்ப்புள்ளது.
எலக்ட்ரிக் வாகனங்ளின் சர்வீஸ் - அதன் கதையே வேற..
எலக்ட்ரிக் வாகனங்களை சர்வீஸ் செய்வதற்கு ஒரு மாறுபட்ட அணுகுமுறை தேவைப்படுகிறது. வழக்கமான பராமரிப்புக்கு செலவு குறைவாக இருக்கலாம், ஆனால் பேட்டரி அமைப்புகள் அல்லது உயர் மின்னழுத்த மின் பாகங்கள் சம்பந்தப்பட்ட பழுதுபார்ப்புகளுக்கு சிறப்பு கருவிகளும் பயிற்சி பெற்ற தொழில்நுட்ப வல்லுநர்களும் தேவைப்படுகிறார்கள். இதனால்தான் பல எலக்ட்ரிக் வாகன உரிமையாளர்கள், குறிப்பாக உத்தரவாதக் காலத்தின் போது, அங்கீகரிக்கப்பட்ட சேவை மையங்களையே தேடி ஓடுகிறார்கள்.
காப்பீட்டிற்கும் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும்
பொதுவான வாகன இன்சூரன்ஸ் பாலிஸிகள் எல்லாம் பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களுக்காகவே உருவானது. அதில் பெரும்பாலும் சார்ஜிங் கேபிள், சார்ஜர் அல்லது பேட்டரி பற்றி எதுவும் குறிப்பிடுவதில்லை. ஆனால் இவைதான் ஒரு எலக்ட்ரிக் வாகனத்தில் அதிக செலவை ஏற்படுத்தும் பாகங்கள்.
குறிப்பாக, பேட்டரிகள் மற்றும் உயர் மின்னழுத்தக் கூறுகள் சம்பந்தப்பட்டிருக்கும்போது, எலக்ட்ரிக் வாகன உரிமையாளர்கள் தங்கள் எலக்ட்ரிக் கார் இன்சூரன்ஸ் பாலிஸி அதையெல்லாம் பாதுகாக்கிறதா எனத் தெரிந்துகொண்டுதான் ஆக வேண்டும்.
கார் காப்பீடு வாங்குவதற்கு முன், எலக்ட்ரிக் வாகனங்களுக்கான இன்சூரன்ஸ் குறிப்புகள், சர்வீஸ் சென்டர்களின் நெட்வொர்க் மற்றும் கிடைக்கக்கூடிய கூடுதல் அம்சங்களை தெரிந்துகொள்ள இணையத்தில் சிறிது நேரம் செலவிடுவது பயனுள்ளது. வாகனத்தையும் இன்சூரன்ஸ் நிறுவனத்தையும் பொறுத்து பிரீமியங்கள் மாறுபட்டாலும், சரியான பாலிசியைத் தேர்ந்தெடுப்பது என்பது, மிக மிக முக்கியம்.
எலக்ட்ரிக் வாகனங்களுக்கு (EVs) மாறுவதற்கு முன் தமிழ்நாட்டு வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் பரிசீலிக்கும் விஷயங்கள்..
ஒரு எலக்ட்ரிக் வாகனத்தை வாங்கும் முடிவு, ஷோரூம் விலைகளை ஒப்பிடுவதையும் தாண்டிச் செல்ல வேண்டும். ஒரு எலக்ட்ரிக் வாகனம் உங்கள் வாழ்க்கை முறைக்குப் பொருந்துமா என்பதை மதிப்பிடுவதே மிகவும் நடைமுறைக்குரிய அணுகுமுறையாகும்:
● ஒவ்வொரு வாரமும் நீங்கள் எத்தனை கிலோமீட்டர் வாகனம் ஓட்டுகிறீர்கள்?
● வீட்டில் சார்ஜரை நிறுவ முடியுமா?
● பணியிடத்தில் சார்ஜ் செய்யும் வசதி உள்ளதா?
● நீங்கள் எவ்வளவு நாட்களுக்கு ஒருமுறை நகரத்திற்கு வெளியே பயணம் செய்கிறீர்கள்?
● சார்ஜிங், சர்வீசிங் மற்றும் விரிவான கார் காப்பீடு உட்பட, உங்கள் வருடாந்திர இயக்கச் செலவுகள் எவ்வளவு?
● உற்பத்தியாளர் வழங்கும் பேட்டரி உத்தரவாதம் என்ன? எத்தனை ஆண்டுகள் அல்லது கிலோமீட்டர்கள்?
வாங்குவதற்கு முன் இந்தக் கேள்விகளை எல்லாம் ஒருமுறை கேட்டுப் பார்த்து பதில் தேடினால், அதன்பின் நீண்ட காலத்துக்கு வருத்தமில்லாமல் மின் வாகனத்தில் பயணிக்க முடியும்.
தமிழ்நாட்டில் எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை மேலும் துரிதப்படுத்தக்கூடியவை எவை?
எலக்ட்ரிக் வாகனங்களின் நீடித்த வளர்ச்சிக்குத் தேவையான பல அடிப்படைகளை தமிழ்நாடு ஏற்கனவே உருவாக்கியுள்ளது; அதன் அடித்தளம் வலுவாக உள்ளது. ஆனால் ஒரு சில மேம்பாடுகள் எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை மேலும் விரைவுபடுத்தக்கூடும்.
முக்கிய நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு நகரங்களில் அதிவேக சார்ஜிங் வழித்தடங்களை விரிவுபடுத்துவது, நீண்ட தூரப் பயணிகளிடையே நம்பிக்கையை மேம்படுத்தும். அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் வளாகங்களில் வீட்டு சார்ஜர்கள் நிறுவுவதை எளிதாக்குவது, நகர்ப்புற நுகர்வோர் எதிர்கொள்ளும் மிகப்பெரிய தடைகளில் ஒன்றை நீக்கக்கூடும்.
பேட்டரி மறுசுழற்சி, தொழில்நுட்ப வல்லுநர் பயிற்சி மற்றும் நிதியுதவி ஆகியவற்றில் தொடர்ச்சியான முதலீடு செய்வதும் இந்தச் சூழலை வலுப்படுத்தும். நுகர்வோருக்கான விழிப்புணர்வும் சம முக்கியத்துவம் வாய்ந்தது. வாங்குபவர்கள் பேட்டரியின் ஆயுள், மின்னேற்றும் பழக்கம் மற்றும் மொத்த உரிமையாளர் செலவு போன்றவற்றைப் பற்றி நன்கு அறிந்துகொள்ளும்போது, வாங்கும் முடிவுகள் நீண்டகால மதிப்பின் அடிப்படையில் மாறும்.
இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது...
தமிழகத்தில் முதிர்ச்சியடைந்த வாகனத் தொழில், விரிவடைந்து வரும் எலக்ட்ரிக் வாகன உற்பத்தித் தளம், நகரத்தின் வாகன பயன்பாட்டு முறை மற்றும் வளர்ந்து வரும் சார்ஜிங் உள்கட்டமைப்பு... இவையெல்லாம் சேர்ந்து ஒரு சாமானிய மனிதனுக்கு எலக்ட்ரிக் கார்கள் ஒரு யதார்த்தமான தேர்வாக மாறும் சூழலை உருவாக்கியுள்ளன.
சவால்கள் நிச்சயமாக நீடிக்கின்றன. முக்கிய நகரங்களுக்கு வெளியே சார்ஜிங் வசதி இன்னும் மேம்படுத்தப்பட வேண்டும், பயன்படுத்தப்பட்ட எலக்ட்ரிக் வாகனச் சந்தை வளர்ந்து வருகிறது. வாங்குபவர்களுக்கு பேட்டரி ஆயுள் மற்றும் காப்பீடு குறித்து தொடர்ந்து கேள்விகள் எழுகின்றன. இருப்பினும், ஒரு புதிய தொழில்நுட்பம் பிரதான நீரோட்டத்தில் நுழையத் தொடங்கும் போது இதுபோன்ற சவால்கள் எழுவது இயல்புதான்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, எலக்ட்ரிக் வாகனப் பயன்பாட்டின் அடுத்த கட்டம் நிதிச் சலுகைகளை மட்டுமே சார்ந்திருக்க வாய்ப்பில்லை. ஒரு எலக்ட்ரிக் கார் தனது அன்றாட வாழ்வில் பொருந்திப் போகும் என்ற நம்பிக்கை ஒவ்வொரு சராசரி மனிதனுக்கும் ஏற்படுகிறதா என்பதைப் பொறுத்தே அது அமையும்.