கல்வி உதவித் தொகை வழங்க மறுப்பு - கூட்டுறவு சங்க இணை பதிவாளர் மீது வழக்கு
சிவகங்கையில் கூட்டுறவு வங்கி மேலாளரின் மகனுக்கு கல்வி உதவித் தொகை வழங்க மறுத்ததாக, கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் உள்பட இருவர் மீது வழக்கு தொடர, அரசு உத்தரவிட்டுள்ளது.
சிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் மேலாளராக பணிபுரியும் மலைச்சாமி என்பவர், தனது மகனுக்கு கூட்டுறவு தொழிலாளர்கள் ஊதிய ஒப்பந்த அடிப்படையில் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பித்திருந்தார். ஆனால், கல்வி உதவித் தொகை வழங்க மறுக்கப்பட்டதால், மதுரை தொழிலாளர் துறை இணை ஆணையரிடம் மலைச்சாமி முறையிட்டதாக தெரிகிறது. இணை ஆணையர் உத்தரவிட்டும், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் பொறுப்பில் இருந்த ஆரோக்கிய சுகுமார், பொது மேலாளராக பொறுப்பு வகித்த காளைலிங்கம் ஆகியோர் மறுத்ததாக கூறப்படுகிறது. பின்னர், தொழிலாளர் ஆணையரிடம் மலைச்சாமி மேல்முறையீடு செய்த நிலையில், ஆரோக்கிய சுகுமார், காளைலிங்கம் ஆகியோர் மீது குற்றவியல் வழக்கு தொடர, சிவகங்கை தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையருக்கு அதிகாரம் வழங்கி அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
