

ஊரடங்கு காலத்தில் தனியாக தவித்த மத்திய பாதுகாப்புப் படை வீரரின் தாயாருக்கு தேவையான உதவிகள் செய்யப்பட்டதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த ரவிக்குமார் என்பவர், குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் மத்திய பாதுகாப்புப் படையில் பணியாற்றி வருகிறார். சொந்த ஊரான கடையநல்லூரில் 89 வயதான அவரது தாயாருக்கு மருந்துகள் தேவைப்படுவது குறித்து ட்விட்டர் மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கோரிக்கை விடுத்தார். இதனையடுத்து அவரது தாயாருக்கு தேவையான மருந்துகள் அதிகாரிகள் மூலம் சென்றடைந்தன. இது தொடர்பாக முதலமைச்சர் விடுத்துள்ள ட்விட்டர் பதிவில், ரவிக்குமாரின் தாயாருக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டதில் காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல் உள்ளிட்ட எந்த பிரச்னைகளும் இன்றி நலமாக இருப்பதாகவும், தைரியத்துடன், நிம்மதியாக இருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.