ஏற்காட்டில் அதிகாலையில் பரபரப்பு: கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்தில் மோதிய சுற்றுலா கார்
இன்று அதிகாலை ஏற்காடு பேருந்து நிலையத்தில் பயணிகளை ஏற்றிச் செல்ல சென்ற கார், டவுன் மெயின் ரோடு பகுதியில் எதிர்பாராத விதமாக மின்கம்பத்தில் மோதியது.
இந்த விபத்தின் வேகத்தில் மின்கம்பம் சாய்ந்து வாகனத்தின் மீது விழுந்தது. இதனால் அப்பகுதியில் மின் இணைப்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டது. அதிகாலை நேரம் என்பதால் சாலையில் போக்குவரத்து குறைவாக இருந்ததாலும், வாகனத்தில் பயணிகள் யாரும் இல்லாததாலும் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.
சத்தம் கேட்டு ஓடிவந்த பொதுமக்கள், இடிபாடுகளில் சிக்கிய ஓட்டுநரை மீட்டனர். லேசான காயமடைந்த அவர், முதலுதவி சிகிச்சைக்காக ஏற்காடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தகவலறிந்து வந்த மின்வாரிய ஊழியர்கள் மின்கம்பத்தை அகற்றி, மின் இணைப்பைச் சீர் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். விபத்து குறித்து ஏற்காடு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
