Chennai Corporation | சென்னை முழுவதும் அதிரடி மாற்றம்... பக்கா பிளான் - உஷாராகும் மாநகராட்சி
சென்னை முழுவதும் அதிரடி மாற்றம்... பக்கா பிளான் - உஷாராகும் மாநகராட்சி
சென்னையில் வடகிழக்கு பருவமழைக்கு முன், சுமார் 391 கோடி ரூபாய் செலவில், 3 ஆயிரத்து 644 சாலைகளை சீரமைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
சென்னையில் 387 கிலோமீட்டர் தொலைவுக்கு 471 பேருந்து தட சாலைகள், 5 ஆயிரத்து 270 கிலோமீட்டர் தொலைவிற்கு 34 ஆயிரத்து 640 உட்புறச் சாலைகள் மாநகராட்சியால் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
கடந்த பருவமழையின் போது சேதமடைந்த சாலைகளை, மூன்று தொகுப்புகளாக சீரமைக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. குறிப்பாக நகர்ப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 857 சாலைகளை 63 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், தமிழ்நாடு நகர்ப்புற உட்கட்டமைப்பு நிதி சேவைகள் திட்டத்தின் கீழ் 1 ஆயிரத்து 197 சாலைகளை 149 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், பேரிடர் சிறப்புத் திட்டத்தின்கீழ், ஆயிரத்து 590 சாலைகள் 180 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் சீரமைக்கப்பட உள்ளதாக மாநகராட்சி தரப்பில் கூறப்பட்டுள்ளது. 3 தொகுப்புகளின் அடிப்படையில் டெண்டர் கோரப்பட்டுள்ள நிலையில், இம்மாத இறுதிக்குள் டெண்டர் முடிவு செய்யப்பட்டு பணிகள் விரைவில் தொடங்கும் என மாநகராட்சி அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இதுமட்டுமின்றி, பருவமழைக்கு முன் சாலைகள் சீரமைக்கப்பட உள்ளதால், சென்னையில் கூடுதலாக வேகத்தடை தேவைப்படும் சாலைகள், சீரமைக்க வேண்டிய சாலைகள் குறித்த பட்டியலை மாநகராட்சியிடம் மாநகர காவல்துறை வழங்கியுள்ளது.
