

எந்த ஒரு பின்புலமும் இல்லாமல், சினிமா நடிகருக்கான தோற்றமும் இல்லாமல் திரைத்துறைக்கு வந்து சாதித்தவர்கள், வெகுசிலரே.
அவர்களுள் நட்சத்திர அந்தஸ்தை பிடித்து, அரசியலிலும் கால்பதித்து அசரவைத்தவர் விஜயகாந்த்.மதுரை வீதிகளில் விஜயராஜ்-ஆக வலம்வந்தவர், சிறுவயதிலேயே சினிமா மீது கொண்ட ஆர்வத்தால், திரையுலகில் விஜயகாந்த்-ஆக அறிமுகமானார்.
கமல், ரஜினி என இரண்டு ஜாம்பவான்கள் திரை உலகை ஆட்சி செய்து கொண்டு இருந்த சமயத்தில், தனக்கென்று ஒரு கூட்டத்தை உருவாக்கி கொடிகட்டி பறந்தார். நாக்கைக் கடிப்பது, ஆவேசமாக வசனம் பேசுவது
என்று பிற்காலத்தில் திரையில் தோன்றிய விஜயகாந்த், காதல் நாயகனாகவும், உருகவைக்கும் சென்டிமென்ட் கலைஞனாகவும் பல படங்களில் முத்திரை பதித்திருக்கிறார்.
பரதன், சேதுபதி ஐபிஎஸ், புலன் விசாரணை, செந்தூரப் பூவே, அம்மன் கோவில் கிழக்காலே, வைதேகி கந்திருந்தாள், சின்னக் கவுண்டர், கேப்டன் பிரபாகரன் என விஜயகாந்த் நடித்த பல படங்கள் வசூலில் உச்சம் தொட்டன.
ரஜினி, கமல், சத்தியராஜ், பிரபு, கார்த்தி என முன்னணி நட்சத்திரங்கள் பலரும் வரிசைகட்டியிருந்த, தமிழ் சினிமாவில் சத்தமே இல்லாமல், விஜயகாந்தும் சாதித்தார். நடிகர்கள் விஜய், மற்றும் சூர்யாவோடு நடித்து, அவர்களது திரையுலக வாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்தியவர்.
40 ஆண்டுகளுக்கும் மேலான திரையுலக பயணத்தில்,150க்கும் அதிகமான படங்களுக்கும் மேல் நடித்திருக்கிறார். தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவராக இருந்தபோது, சினிமா நட்சத்திரங்களை வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்று நட்சத்திர கலை விழா நடத்தி கடனில் மூழ்கியிருந்த நடிகர் சங்கத்தை மீட்டெடுத்தார். நடிகர்களில் வேறு யாரும் செய்யாத அளவுக்கு ஏழை, எளிய மக்களுக்குப் பல வழிகளில் உதவி செய்துள்ளார் விஜயகாந்த்.
தேமுதிக.வை தொடங்கி அரசியலில் காலடி எடுத்து வைத்து சட்டசபையில் தனி ஆளாக நுழைந்து, பின்னர் குறுகிய காலத்திலேயே எதிர்க்கட்சி தலைவராகவும் சிம்மாசனமிட்டு அமர்ந்தார். வெள்ளந்தியான, மனதில் பட்டதை வெளிப்படையாகப் பேசும் தனது சுபாவத்தால், அரசியலிலும் முத்திரை பதித்தார். அரசியல் தலைவராக இவரின் மாறுபட்ட அணுகுமுறை
தொண்டர்களின் உள்ளம் கவர்ந்தது.
புரட்சிக் கலைஞர் என்று ரசிகர்களாலும், கேப்டன் என்று தொண்டர்களாலும் அன்புடன் அழைக்கப்படும் விஜயகாந்த், தற்போது மீண்டும்
உடல்நலம் தேறி இருப்பதாக கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் களமிறங்கி, தன் சிம்மக்குரலால், அரசியல் மேடைகளில் மீண்டும் முழங்குவார் என்று எதிர்பார்த்துக் காத்திருக்கும் தொண்டர்களின் விருப்பம் நிறைவேறுமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.