திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றவில்லை என கூறி ஒருவர் தீக்குளித்து உயிரிழப்பு?
மதுரை நரிமேடு பகுதியை சேர்ந்த பூரணசந்திரன் என்பவர் பழவியாபாரம் செய்து வந்தார். மதுரை மாநகராட்சி அலுவலகம் அருகே உள்ள பெரியார் சிலை அருகே வாகனத்தை நிறுத்திய அவர், பக்கத்தில் இருந்த போலீஸ் பூத்திற்குள் நுழைந்து கதவை தாழிட்டு கொண்டு உடலில் தீயை பற்ற வைத்துக்கொண்டார். தீயணைப்புத்துறையினர் வந்து பாரத்தபோது அவர் எரிந்த நிலையில் சடலமாக கிடந்தார். உயிரிழந்த பூரணசந்திரன் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக வீடியோ ஒன்றை உறவினருக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது. அதில் திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றவில்லை என்பதால் தற்கொலை செய்து கொள்ள உள்ளதாக உறவினர்களிடம் தெரிவித்தாக கூறப்படுகிறது .
திருப்பரங்குன்றம் தீபத்தூணில், தீபமேற்ற வேண்டுமென்பதை வலியுறுத்தி, முருக பக்தர் பூர்ண சந்திரன் என்பவர், தீக்குளித்து தனது உயிரை மாய்த்துக் கொண்டார் என்ற செய்தி பெரும் அதிர்ச்சியையும் வருத்தத்தையும் அளிக்கிறது என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு இரங்கல் கூறியுள்ள அவர், வருந்தத்தக்க முடிவுகளை ஒருபோதும் எவரும் மேற்கொள்ளக் கூடாது என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
