தாய்ப்பால் கொடுக்க தாமதம் - இழப்பீடு வழங்க மருத்துவமனைக்கு உத்தரவு
தாய்ப்பால் கொடுக்க தாமதப்படுத்தியதால், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.60,000 இழப்பீடு வழங்க, தனியார் மருத்துவமனைக்கு நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
நெல்லை பாளையங்கோட்டை பகுதியை சேர்ந்த சையத் அலி பாத்திமா, மகப்பேறு சிகிச்சைக்காக, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு மஞ்சள் காமாலை இருந்ததால், தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. குழந்தைக்கு 2மணி நேரத்திற்கு ஒரு முறை தாய்ப்பால் கொடுப்பது கட்டாயம் என மருத்துவர்கள் அறிவுறுத்திய நிலையில், 2024 மே மாதம் 16ஆம் தேதி, தீவிர சிகிச்சை பிரிவின் கதவை திறக்காமல் செவிலியர்கள் காலம் தாழ்த்தியதால் தாய்ப்பால் வீணடிக்கப்பட்டது. இதனால் மன உளைச்சல் அடைந்த சையத் அலி பாத்திமா, நெல்லை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த ஆணையத் தலைவர் பிரதீப் பெருமாள், சையத் அலி பாத்திமாவுக்கு 50 ஆயிரம், வழக்கு செலவு 10 ஆயிரம் ரூபாய் வழங்க தனியார் மருத்துவமனைக்கு உத்தரவிட்டார்.
