புதுச்சேரி பாஜக எம்எல்ஏ மீது வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு
புதுச்சேரி முன்னாள் அமைச்சரும், பாஜக எம்.எல்.ஏவுமான சாய் சரவணன்குமார் மீது வழக்குப்பதிவு செய்ய காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சாய் சரவணன்குமாருக்கும், பா.ஜ.க பிரமுகர் உமா சங்கர் மற்றும் அவரது தங்கை பூர்ணிமாவிற்கும், கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட நிலப்பிரச்னை, சமூக வலைதளங்களில் பரவியது. இந்நிலையில், உமாசங்கர் கடந்த ஏப்ரல் மாதம் கொலை செய்யப்பட்டார். நிலப்பிரச்னை காரணமாகவே இந்த கொலை நடந்ததாக அவரது குடும்பத்தினர் புகார் தெரிவித்தனர்.
இதனிடையே, நிலப்பிரச்னையில் லாஸ்பேட்டை போலீசார் ஒருதலைபட்சமாக செயல்படுவதாகவும், அமைச்சராக இருந்த சாய் சரவணன்குமார், தனது அதிகாரத்தை பயன்படுத்தி தங்களுக்கு நியாயம் கிடைப்பதை தடுப்பதாகவும், புதுச்சேரி குற்றவியல் நீதிமன்றத்தில் பூர்ணிமா வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி சேரலாதன், பாஜக எம்.எல்.ஏ. சாய் சரவணன்குமார் மீது நிலத்தகராறு தொடர்பாக, இரண்டு சட்டப் பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்ய முகாந்திரம் உள்ளதாகவும், லாஸ்பேட்டை போலீசார் விசாரிக்க தவறிவிட்டதாகவும் கூறி, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.